×

ஜல்லிக்கட்டிற்கு டோக்கன் மறுப்பு காளைகளை நடுரோட்டில் நிறுத்தி மறியல் போராட்டம்: சின்னமனூரில் பரபரப்பு

சின்னமனூர்: ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ளூர் காளைகளுக்கு டோக்கன் வழங்க மறுத்ததால், சின்னமனூரில் நடுரோட்டில் காளைகளை நிறுத்தி சாலை மறியல் செய்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் வரும் 16ம் தேதி ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது. இதில் பங்கேற்க 600க்கும் மேற்பட்ட டோக்கன், விழா கமிட்டியால் காளை வளர்ப்போருக்கு வழங்கப்படுவது வழக்கம். கடந்த 2 நாட்களாக டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. சின்னமனூர் பகுதியில் 60 காளைகள் வளர்க்கப்படுகின்றன. இவை தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டில் பங்கேற்று வருகின்றன. ஆனால், அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில் 10 டோக்கன் மட்டுமே தரமுடியும் என விழாக்கமிட்டியினர் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த 10க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை, அதனை வளர்ப்போர் சின்னமனூர் மார்க்கையன்கோட்டை ரவுண்டானா பிரிவில் நடுரோட்டில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம், உரிய டோக்கன் வாங்கி தருகிறோம் என சமாதானம் செய்தனர். இதன் பின் காளைகள் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.இதுகுறித்து காளை வளர்ப்போர் கூறுகையில், ``தேனியை சேர்ந்த ஒரு அதிமுக பிரமுகருக்கு 150 டோக்கன் தந்துள்ளனர். அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக ஒரு காளைக்கு தினமும் ரூ.300 முதல் ரூ.500 வரை செலவு செய்துள்ளோம். இப்போது டோக்கன் தர முடியாது என்கின்றனர். தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் இப்பிரச்னையில் தலையிட்டு சுமூகத்தீர்வு காண வேண்டும்’’ என்றனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



Tags : Jallikattu, bull, stir fight
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...