×

கோயில் திருவிழாவில் மாநில அளவில் ஆன்லைன் போட்டி பாரம்பரிய விளையாட்டுக்கு ‘பை’ ‘பப்ஜி’ விளையாட்டுக்கு அழைப்பு: சிறுவர்களை சீரழிக்கும் என காரைக்குடி பகுதி மக்கள் வேதனை

காரைக்குடி: அவசர அழைப்புகள், பயன்பாடு மற்றும் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தும் முறைகளுக்கு, செல்போன் பயன்பாடு இன்றைய நவீன உலகில் மிக முக்கியமாக உள்ளது. பெரியவர்கள் அவசர தேவைக்கு பயன்படுத்தினாலும், சிறுவர்கள், இளைஞர்கள் அதிகளவு ஆன்லைன் விளையாட்டில் அதிகளவு நேரத்தை செலவிடுகின்றனர். இதனால் படிப்பு கெட்டுப்போவதோடு, வெளியில் சென்று விளையாடுவதையும் தவிர்த்து வருகின்றனர். இதனால் மனநலம், உடல்நலம் பாதிக்கப்படுகிறது. கடந்த ஒரு சில ஆண்டுகளாக பப்ஜி விளையாட்டை பள்ளி, கல்லூரி மாணவர்கள், அதிகளவு விளையாடி வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி கற்றல் திறன், மனநிலை மாறுவதாக கூட புகார் எழுந்தது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் உள்ள சோமசுந்தரேஸ்வரர் - சவுந்திரநாயகியம்மன் கோயிலில் அடுத்த மாதம் மாசி திருவிழா நடைபெற உள்ளது.

இதற்காக ஒரு தனியார் மொபைல் விற்பனை கடை சார்பில் ‘மாநில அளவிலான பப்ஜி போட்டி’ ஒன்றை அறிவித்துள்ளனர். இதற்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.50 ஆயிரம், முன்றாம் பரிசு ரூ.20 ஆயிரம் என தெரிவித்துள்ளனர். நுழைவுக்கட்டணம் ரூ.300 என நிர்ணயம் செய்துள்ளனர். இதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் ஆன்லைன் பதிவுகள் குவிந்துள்ளதாக கூறப்படுகிறது. நுழைவுக்கட்டணமாக ஒரு குழுவுக்கு ரூ.300 என கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லல் பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பொதுவாக, கோயில் திருவிழாக்களில் மாட்டுவண்டி பந்தயம், சிலம்பம், கபடி, உறியடி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், முதல்முறையாக செல்போனில் விளையாடும் ஒரு விளையாட்டை அடிப்படையாக கொண்டு போட்டி நடத்தி, பாரம்பரிய விளையாட்டு முறையை தவிர்ப்பதா என பக்தர்கள், பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எதிர்ப்பு வலுத்துள்ள அதே நேரத்தில், ஆயிரக்கணக்கில் பதிவுகளும் குவிந்துள்ளதாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்கள் மற்றும் செல்போன் விளையாட்டால் இளைய சமுதாயம் சீரழிந்து வருகிறது என அனைவரும் பேசி வரும் நிலையில், செல்போன் விளையாட்டையே ஒரு போட்டியாக அறிவித்துள்ளது பெற்றோர்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில் பங்கேற்க கட்டணமும் வசூலிக்கின்றனர். இதற்கு முறையாக அனுமதி பெற்றுள்ளனரா என்று தெரியவில்லை’’ என்றனர்.

Tags : State ,game ,Carnival Calling for 'Pai' 'Pabji ,temple festival ,State Festival Online , Temple Festival, Online Competition, Paige Page, Karaikudi
× RELATED மாநில அளவிலான சிலம்ப போட்டி: கோவை வீரர்கள் அசத்தல்