×

ராமர் கோவில் கட்டுவதற்காக மத்திய அரசு அமைத்துள்ள அறக்கட்டளையின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பராசரன் நியமனம்!

புதுடெல்லி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக மத்திய அரசு அமைத்துள்ள அறக்கட்டளையின் தலைவராக தமிழகத்தை சேர்ந்தவரும், மூத்த வழக்கறிஞருமான பராசரன் நியமிக்கப்பட்டுள்ளார். பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்த அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கில் 2019ம் ஆண்டு நவ. 9ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது. மேலும், ராமர் கோவில் கட்டுவதற்கு ஒரு அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், பாபர் மசூதி கட்டுவதற்காக சன்னி வக்ப் வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டு உள்ளது.

அதனை பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், இந்த அறக்கட்டளையானது கிரேட்டர் கைலாஷ் பகுதியில் அமைந்துள்ளது. ஆர்-20, கிரேட்டர் கைலாஷ்-1, புதுடெல்லி என்பது அதன் முகவரியாகும், என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த முகவரியானது, தமிழகத்தை சேர்ந்த உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.பராசரனின் வீட்டு முகவரியாகும். இந்நிலையில், கோவையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் முரளிதர ராவ், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

மூத்த வழக்கறிஞர் பராசரன் தலைமையில் ராமர் கோவில் கட்டும் பணிகள் ஓரிரு ஆண்டுகளில் நிறைவடையும் என்று முரளிதர ராவ் குறிப்பிட்டுள்ளார். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரிலான இந்த அறக்கட்டளையின் தலைவராக பராசரன் நியமிக்கப்பட்டுள்ளார். ராமர் கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞரரான பராசரன் தமிழ்நாட்டின் ஸ்ரீரங்கத்தில் 1927ம் ஆண்டு பிறந்தார். 2 முறை அட்டார்னி ஜெனரலாக பதவி வகித்த 92 வயதாகும் வழக்கறிஞர் பராசரன் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். அவரது தந்தை கேசவ ஐயங்காரும் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Advocate Parasharan ,President ,Rama Temple K Parasaran ,parties counsel ,Central Government Foundation ,Ayodhya ,Ram Temple Trust , Ayodhya, Ram Temple, Central Government, trust, Lawyer Parasaran
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...