×

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் ரூ.4.90 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்: பிப்.28ல் கணக்கெடுப்பு துவக்கம்

ஈரோடு: ஈரோடு அருகே வெள்ளோடு வி.மேட்டுப்பாளையத்தில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்திற்கு கீழ்பவானி வாய்க்கால் கசிவுநீர் மற்றும் மழைநீருமே நீராதாரமாக இருந்து வருகிறது. 200 ஏக்கர்  பரப்பளவு கொண்ட இந்த சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் சீசன் காலங்களில் மஞ்சள் மூக்குநாரை, கரண்டிவாயன், கூழைக்கடா, நத்தைக்குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்ற பறவை இனங்கள் வந்து செல்கிறது. இதுமட்டுமின்றி ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பெலிகன் பறவைகள் என 109 வகையான பறவைகள் வந்து செல்கிறது. நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இந்த பறவைகள் வந்து தங்கியிருந்து முட்டையிட்டு குஞ்சி பொரித்து இனப்பெருக்கம் செய்து அவற்றுடன் திரும்பி செல்கிறது.

ஆண்டுதோறும் இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஒரு லட்சம் பறவைகள் வந்து செல்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வறட்சி காரணமாக வெள்ளோடு பறவைகள் சரணாலயம் வறண்டு காணப்பட்டது. இதனால், பறவைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.குறிப்பாக, 35 ஆயிரம் பறவைகள்தான் சீசனுக்கு வந்து செல்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக பறவைகள் வருவது குறைந்தது. இதனால், ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி அடிப்படை வசதிகள் செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி, ரூ.4.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால், இந்தாண்டு பறவைகள் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதைக்கருத்தில் கொண்டு வரும் 28 மற்றும் 29ம் தேதிகள் என இருநாட்கள் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கப்படுகிறது.

இதில், சீசனுக்காக வரும் பறவைகள் குறித்தும், எந்த வகையான பறவைகள் அதிக அளவில் வருகிறது என்பது குறித்தும் ஆய்வு செய்ய உள்ளனர். இதுகுறித்து மாவட்ட வனஅலுவலர் விஸ்மிஜூ விஸ்வநாதன்  கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் பறவைகள் சரணாலயங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 6 மற்றும் 7ம் தேதிகளில் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நிர்வாக காரணங்களுக்காக தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெறும். இந்த பணியில் வனத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், பறவை ஆர்வலர்கள், வன உயிரியல் புகைப்பட நிபுணர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், கல்லூரி மாணவ, மாணவியர் கொண்ட குழுவினர் ஈடுபட உள்ளனர்.

இக் குழுவினர் பறவைகள் அதிகாலையில் கூட்டை விட்டு வெளியேறும் நேரத்திற்கு முன்பாக கணக்கீடு செய்வார்கள். இந்த பணிகள் காலை 8 மணி வரை நடைபெறும். பின்னர், மாலை 5 மணியில் இருந்து 6.30 மணி வரை அல்லது சூரியன் மறையும் வரை இந்த குழுவினர் பறவைகள் குறித்து கணக்கெடுப்பு பணி மேற்கொள்வார்கள். இந்த கணக்கெடுப்பிற்கு பிறகே தற்போது வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் எவ்வளவு பறவைகள் இருக்கும் என தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Velodu Bird Sanctuary: Survey , Wildlife Bird Sanctuary, Development Project
× RELATED போலி சான்றிதழ்களை தடுக்க நடவடிக்கை...