×

வத்திராயிருப்பில் காட்சிப் பொருளான குடிநீர் தொட்டிகள்: பேரூராட்சி நிர்வாகம் கவனிக்குமா?

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் போர்வெல்களில் நீர்மட்டம் குறைந்ததால் குடிநீர் தொட்டிகளின் தண்ணீரின்றி காட்சிப் பொருளாக உள்ளன. தற்போது மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்த நிலையில் மீண்டும் குடிநீர் தொட்டிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பில் உள்ள நீலகண்டியம்மன் கோயில் அருகே முடுக்குத்தெருவிலும், சேடக்குடி தெருவிலும் போர்வெல் போட்டு குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இந்த தொட்டிகள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில், நிலத்தடி நீர் குறைந்ததால், போர்வெல்களில் தண்ணீர் இல்லாததால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் இல்லை.  இதனால், இப்பகுதி பெண்கள் தண்ணீருக்காக குடங்களை தூக்கிக் கொண்டு, தொலை தூரத்திற்கு அலைகின்றனர். குடிநீர் தொட்டிகள் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் நிலத்தடி நீர் உயர்ந்துள்ள நிலையில், குடிநீர் தொட்டிகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர். இது குறித்து திமுக முன்னாள் கவுன்சிலர் மாரிமுத்து கூறிகையில், ‘வத்திராயிருப்பில் முடுக்குத் தெரு மற்றும் சேடக்குடி தெருவில் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்’ என்றார்.

Tags : Drinking tanks, display material, drinking water
× RELATED காரமடை அருகே 7 குட்டிகளை ஈன்ற அதிசய ஆடு