×

குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதாரக்கேடு: உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பரமக்குடி: பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் குவிந்துகிடக்கும் குப்பைகளால் சுகாதார ஏற்பட்டு பொதுமக்கள் சிக்கித் தவிக்கின்றனர். உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பரமக்குடி ஊராட்சி ஒன்றிய பகுதியில் குப்பைகள் அதிகளவு குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் முக்கிய பிரச்னையே குப்பைதான். இவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுப்பதில்லை. துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பை அப்புறப்படுத்த பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான நிதியும் ஒதுக்கப்படுகிறது. ஆனால் குப்பை மட்டும் குறைந்தபாடில்லை. எங்கு பார்த்தாலும் மலைபோல் குப்பை குவிக்கப்பட்டுள்ளன.

இதோடு தெரு மற்றும் குப்பைத் கிடங்கில் கொட்டி தீ வைக்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு அடைகிறது. கிராம ஊராட்சி பகுதியில் உள்ள குப்பை தொட்டிகளில் குப்பைகளை அகற்றாமல் அதே இடத்தில் தீ வைப்பதால் ஏற்படும் புகை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சு திணறலை ஏற்படுத்துகிறது. ரோட்டில் செல்ல முடியாத அளவிற்கு புகை அடர்த்தியாக வெளியாகிறது. இதனால், கண் எரிச்சல், சுவாசக் கோளாறும் ஏற்படுகிறது. உரப்புளி கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காக்கா தோப்பு வைகை கரையில் குவிந்துள்ளது. தீ வைப்பதால் கிடங்கு அருகில் உள்ள மின்வாரிய டிரான்ஸ்பார்மர்கள், வயர்கள் கருகும் அபாயத்தில் உள்ளது. குப்பை காற்றில் பறந்து அப்பகுதியில் உள்ள சாலையில் செல்லும் வாகனங்கள் மீது விழுந்து வாகன ஓட்டிகளை நிலைகுலைய செய்கிறது.

இதுபோன்ற குறைபாடுகளை களைய உள்ளாட்சி அமைப்புகள் முன் வர வேண்டும். குப்பையை மறு சுழற்சி முறையில் மட்கும், மட்கா குப்பையாக பிரித்து உரமாக மாற்ற வழிகள் இருந்தும் உள்ளாட்சி அமைப்புகள் கண்டுக்காமல் உள்ளன. உடனுக்குடன் அள்ளினாலே குப்பை தேங்காது. மக்களும் குப்பையை கண்ட இடங்களில் கொட்டாமல் இருக்க உள்ளாட்சி அமைப்புகள் குப்பை தொட்டி அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : government , Rubbish, Sanitation, Local Government
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...