×

சொந்த இடம் இருந்தும் 7ஆண்டாக வாடகை கட்டிடத்தில் இயங்கும் நூலகம்: புதிதாக கட்ட வாசகர்கள் எதிர்பார்ப்பு

தரங்கம்பாடி: தரங்கம்பாடி வட்டார நூலகம் கடந்த 7 வருடமாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. நூலகத்திற்கு சொந்த இடம் இருப்பதால் அதில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் வாசகர்கள் உள்ளனர். தரங்கம்பாடியில் 1966ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி தரங்கம்பாடி நூலகம் திறக்கபட்டது. அந்த நூலகத்திற்கு 1999ம் ஆண்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. புதிய கட்டிடத்தில் இயங்கி வந்த தரங்கம்பாடி நூலகம் 2008ம் ஆண்டு முதல் வட்டார நூலகமாக தகுதி உயர்த்தபட்டு செயல்பட்டு வந்தது. நூலக கட்டிடம் மிகவும் பழுதடைந்து மழை காலங்களில் தண்ணீர் ஒழுகி நூல்கள் சேதமடைந்தன. நூலகத்திற்கு வரும் வாசகர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை இருந்தது.

எனவே கடந்த 2013ம் ஆண்டு அந்த நூலகம் தரங்கம்பாடி வெளிப்பாளையத்தில் உள்ள தனியார் வாடகை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. இந்த கட்டிடத்தில் போதிய இட வசதி இல்லாததால் வாசகர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். வாடகை கட்டிடத்திற்கு மாறி 7 ஆண்டுகள் ஆகியும் நூலகத்திற்கு உள்ள சொந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்படாமல் உள்ளது. விரைவாக நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று நூலகத்திற்கு வரும் வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய கட்டிடம் கட்ட பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து அந்த நிதி மூலம் புதிய நூலக கட்டிடம் கட்ட வேண்டும் என்று மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : library ,space , Rental Building, Library
× RELATED கலைஞர் நூற்றாண்டு நூலகம் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்தது