×

புதர் மண்டிய கட்டிடங்களால் படையெடுக்கும் பாம்புகள்: சிவகங்கை நகர் மக்கள் பீதி

சிவகங்கை: சிவகங்கையில் முந்தைய அரசு மருத்துவமனையில் உள்ள கட்டிடங்கள் பராமரிப்பின்றி, புதர் மண்டிக்கிடக்கின்றன. சிவகங்கை நகர் பகுதியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இயங்கி வந்தது. இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு முதல் இந்த மருத்துவமனை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. ஏற்கனவே மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வந்த வளாகத்தில் ஹோமியோபதி மற்றும் சித்தா மருத்துவமனை, காச நோய் மருத்துவமனை ஆகியன இயங்கி வருகின்றன. இவைகள் தவிர முந்தைய அரசு மருத்துவ மனையில் உள்ள மற்ற அனைத்துக்கட்டிடங்களும் காலியாக உள்ளன. இங்கு சுமார் 20க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தனித்தனியே உள்ளன. கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக பராமரிப்பின்றி உள்ளதால் கட்டிடங்களை சுற்றிலும் புதர் மண்டிக்கிடக்கின்றன.

எவ்வித பராமரிப்பும் இல்லாமல் இருப்பதால் கட்டிடத்தின் உள் மற்றும் வெளிப்பகுதிகள் சிதிலமடைய தொடங்கியுள்ளன.இந்த மருத்துவமனை கட்டிடங்களை சுற்றிலும் வீடுகள், கட்டிடங்கள் உள்ளன. மருத்துவமனை கட்டிட காம்பவுண்ட் சுவரையொட்டி தெற்கு பகுதியில் பார்வையற்றோர் பள்ளி உள்ளது. மருத்துவமனை கட்டிட புதர்களுக்குள் இருந்து பள்ளிக்குள் பாம்புகள் புகுந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு பள்ளிக்குள் இருந்து தீயணைப்பு துறையினரால் சாரைப்பாம்பு பிடிக்கப்பட்டது. பார்வையற்றோர் பள்ளி என்பதால் பாம்புகள் உள்ளே புகுந்தால் மாணவர்கள் பார்க்க முடியாத நிலையில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் நிலை உள்ளது. இது போல் இப்பகுதி வீடுகளுக்குள்ளும் பாம்புகள் புகுந்து வருகின்றன.

எனவே, மருத்துவமனை வாளாகத்தில் உள்ள புதர்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:தற்போது மருத்துவமனை வளாகம் பயன்படுத்தப்படாமல் பராமரிப்பின்றி சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக உள்ளது. கட்டிடங்கள் அனைத்தும் பராமரிப்பின்றி புதர் மண்டிக்கிடக்கிறது. சில கட்டிடங்களில் மட்டுமே மருத்துவ மனை இயங்கி வருகிறது. மற்ற கட்டிடங்கள், புதர்களில் இருந்து பாம்புகள், பூச்சிகள் இப்பகுதி முழுவதும் செல்கின்றன. புதர்களை அகற்றி, பழைய மருத்துவமனை கட்டிடங்களுக்கு வாடகை அரசு அலுவலகங்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றனர்.

Tags : Sivagangai Nagar ,buildings , Shrubbery Building, Snakes, Sivaganga
× RELATED 8070 ச.அடி கொண்ட அனைத்து வீடுகள் மின்...