×

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கத்திற்கு பின் பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு 73% குறைவு: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கத்திற்கு பின் பாதுகாப்பு படையினர் கொல்லப்படுவது 73% குறைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது. அத்துடன் அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர் எனவும், லடாக் எனவும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. ஆனால், மத்திய அரசின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதன் காரணமாக, காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அங்கு தீவிரவாத தாக்குதல்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கத்திற்கு பின் பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு 73% குறைந்துள்ள மத்திய அரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி, 2019 ஆகஸ்ட் மாதம் முதல் காஷ்மீரில் பொது பாதுகாப்பு கருதி 444 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 389 பேர் இன்னமும் வீட்டு காவலிலேயே வைக்கப்பட்டுள்ளனர். 2019 பிப்ரவி 13ம் தேதி முதல் ஆகஸ்டு 4 வரையிலான 173 நாட்களில் 82 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதே சமயம் 370வது சட்டப்பிரிவு விலக்கிக் கொள்ளப்பட்ட ஆகஸ்டு 5ம் தேதி முதல் 2020 ஜனவரி 24 வரையிலான 173 நாட்களில் 22 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர், என்று கூறியுள்ளார். எழுத்துபூர்வமாக அவர் அளித்த மற்றொரு பதிலில், ஆகஸ்டு 5ம் தேதி முதல் 32 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் 19 பேர் பயங்கரவாத தாக்குதல் அல்லது பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்துள்ளனர். கள நிலவரங்களின் அடிப்படையில் ஒவ்வொரு சம்பவத்தையும் கணக்கில் கொண்டு, புள்ளிவிவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன, என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags : Security forces ,Kashmir ,Jammu ,security force personnel , Kashmir, Law 370, Secuity Force, Fatalities, Union Home Ministry
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...