×

நெல் கொள்முதல் நிலையங்களில் வசூல்?

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் திறக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் மூடைக்கு ரூ.40 வரை வசூல் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு சுமார் 60 ஆயிரம் எக்டேரில் நெல் விவசாயம் செய்யப்பட்டது. இதன் மூலம் சுமார் 3.3 லட்சம் மெட்ரிக் டன் நெல் அறுவடை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மாவட்டம் முழுவதும் அறுவடைப்பணி நடந்து வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல்லை விவசாயிகளிடம் இருந்து வாங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் மாவட்டம் முழுவதும் 45 இடங்களில் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொள்முதல் நிலையங்கள் பகுதி, பகுதியாக திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் விவசாயிகளிடம் 40 கி.கி. கொண்ட ஒரு மூடை நெல் ரூ.760க்கு பெறப்படுகிறது.

நெல்லை சுத்தம் செய்வதற்கென ஒரு மூட்டைக்கு ரூ.32 முதல் ரூ.40 வரை வசூல் செய்யப்படுகிறது. சுத்தம் செய்வதற்கென அரசு சார்பில் இயந்திரம் வழங்கப்பட்டும் சுத்தம் செய்ய கூடுதலாக பணம் வசூல் செய்கின்றனர். நெல் மூட்டையை எடை வைக்கவும் வசூல் செய்யப்படுகிறது. இவ்வாறு வசூல் செய்யும் பணம் உள்ளூர் ஆளும் கட்சியினர் மற்றும் அதிகாரிகளுக்கு செல்கிறது. இவ்வாறு பணம் பங்கிடும் பிரச்னையில் மானாமதுரை அருகே மாங்குளம் நெல் கொள்முதல் நிலையம் செயல்படாமல் உள்ளது. இங்கு 2 ஆயிரம் மூட்டைக்கு மேல் நெல் சுத்தம் செய்யப்படாமலும், கொள்முதல் செய்யப்படாமலும் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதுபோல் நெல் கொண்டு வந்து கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்பவர்கள் விவசாயிகள் தான் என்பதற்கு ஆதாரமாக விவசாய நிலங்களின் பத்தொன்று (10/1) கொண்டு வந்து அந்த எண்ணை பதிவு செய்ய வேண்டும். ஆனால் அதுபோல் செய்வதில்லை. இதனால் விவசாயிகளின் போர்வையில் வியாபாரிகள் கொள்முதல் நிலையங்களை ஆக்கிரமித்துள்ளனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் மாவட்ட செலாளர் வீரபாண்டி கூறியதாவது: அரசு கொள்முதல் நிலையங்கள் தாமதமாகவும், குறைவான இடங்களில் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தனியார் வியாபாரிகள் கிராமங்கள் தோறும் சென்று விவசாயிகளிடம் நெல்லை குறைந்த விலைக்கு வாங்கும் பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டனர். அரசு விலையைவிட ஒரு மூடைக்கு ரூ.300 வரை குறைத்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்த வியாபாரிகள் தற்போது அந்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்கின்றனர். சுத்தம் செய்ய ஒரு மூடைக்கு ரூ.40 வசூல் செய்கின்றனர். இவ்வாறு வசூல் செய்யும் பணத்தை பங்கிட்டுக்கொள்ள பல்வேறு இடங்களில் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொள்முதல் நிலையங்களில் உடனடியாக ஆய்வு நடத்தி கூடுதல் வசூலில் ஈடுபடும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : paddy purchasing centers ,paddy purchase centers , Paddy Purchasing Station, collections
× RELATED நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்...