×

கன்னியாகுமரி - மும்பை எக்ஸ்பிரஸ் நேரம் மாறுகிறது குமரி மாவட்ட பயணிகள் பாதிக்கப்படும் அபாயம்: திருவனந்தபுரத்துக்கு கூடுதல் ரயில் இயக்கப்படுமா?

நாகர்கோவில்: கன்னியாகுமரி - மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் நேரத்தை மாற்றுவதால், காலை வேளையில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்ல கூடுதலாக ஒரு பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு என பல்வேறு காரணங்களுக்காக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில்களில் செல்கிறார்கள். நாகர்கோவிலில் இருந்து காலை 6.30 மற்றும் காலை 7.55க்கு பயணிகள் ரயில் புறப்பட்டு செல்கிறது. இடையில் காலை 7 மணிக்கு கன்னியாகுமரி - மும்பை எக்ஸ்பிரஸ் (திருவனந்தபுரம் வழி) புறப்பட்டு செல்கிறது. இந்த ரயில், கன்னியாகுமரியில் இருந்து காலை 6.35க்கு புறப்பட்டு, காலை 7 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வரும். பின்னர் காலை 7.05 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பில் இருந்து புறப்பட்டு செல்லும். காலை 9 மணிக்கு இந்த ரயில் திருவனந்தபுரத்தை அடையும் என்பதால், இந்த ரயிலில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் திருவனந்தபுரத்துக்கு செல்கிறார்கள். திருவனந்தபுரத்துக்கு செல்ல கூடிய பயணிகளுக்கு இந்த ரயில் மிகவும் வசதியாக உள்ளது.

இந்த நிலையில் வருகிற மே மாதத்தில் இருந்து இந்த ரயிலின் பயண நேரம் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இந்த ரயில் காலை 8.45க்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. ரேணிகுண்டாவில் சுமார் 2 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு வேகம் அதிகரிக்கப்பட இருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இவ்வாறு இந்த ரயிலை காலை 8.45க்கு மாற்றினால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லக்கூடியவர்கள் காலை 6.30 பயணிகள் ரயில் அல்லது காலை 7.55க்கு புறப்பட்டு செல்லும் பயணிகள் ரயிலில் தான் பயணம் செய்ய வேண்டும். காலை 6.30  ரயிலை விட்டு விட்டால், இடையில் சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து தான் ரயில் கிடைக்கும். எனவே பயணிகள் பெரும் பாதிப்படைவார்கள். எனவே கன்னியாகுமரி - மும்பை ரயிலின்  நேரத்தை மாற்றி அமைக்கும் போது, காலை 7 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு செல்ல வசதியாக கூடுதலாக புதிய பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து ரயில்வே ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினர் வள்ளிக்கண்ணு கூறியதாவது: நிர்வாக காரணங்களுக்காக கன்னியாகுமரி - மும்பை ரயில் நேரத்தை மாற்றி அமைக்கிறார்கள். அவ்வாறு மாற்றி அமைக்கும்பட்சத்தில் காலை வேளையில் புதிய பயணிகள் ரயில் இயக்க வேண்டும். இது பற்றி வசந்தகுமார் எம்பி, உடனடியாக ரயில்வே அதிகாரிகளிடம் பேசி புதிய ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு காலை 7 மணி அளவில் கூடுதலாக ஒரு ரயில் இயக்கப்படாமல் இருந்தால் குமரி மாவட்ட  பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாவார்கள். எனவே உடனடியாக இதற்கான நடவடிக்கையை தொடங்க வேண்டும். கேரளாவில் உள்ள எம்பிக்கள் ரயில்வே வளர்ச்சியில் அதிக அக்கறையுடன் உள்ளனர். தமிழக  எம்பிக்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. எனவே ரயில்வேக்கு முக்கியத்துவம் கொடுத்து ரயில் வசதிகளை பெற வேண்டும்.
கன்னியாகுமரி - மும்பை ரயில் கன்னியாகுமரியில் இருந்து காலை 6.40 மணிக்கு பதிலாக 8.25 மணிக்கு புறப்பட்டால் இந்த ரயில் நாகர்கோவிலுக்கு 8.45, திருவனந்தபுரத்துக்கு 10.15, கொல்லத்துக்கு 11.30 மணிக்கு போய் சேரும். இதனால் காலை 9 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டிய குமரி மாவட்ட பயணிகள் கடுமையாக பாதிப்படைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

சத்தமில்லாமல் சாதிக்கும் கேரளா
குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறியதாவது: திருவனந்தபுரம் - கொல்லம் மார்க்கத்தில் தற்போது அலுவல் நேரத்துக்கு பயணம் செய்யும் கேரள பயணிகளுக்கு மாற்று ஏற்பாடாக நாகர்கோவில் - திருவனந்தபுரம் (56310) பயணிகள் ரயில் கொல்லம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சத்தமில்லாமல் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு தினசரி செல்லும் பயணிகள் வசதிக்காக எந்தவொரு மாற்று ஏற்பாடும் செய்யவில்லை. தற்போது குமரி மாவட்ட பயணிகள் திருவனந்த புரத்துக்கு செல்லும் 2 பயணிகள் ரயிலை மட்டுமே நம்பி உள்ளனர். நாகர்கோவிலில் இருந்து அதிகாலை 4.05 மணிக்கு புறப்படும் பரசுராம் ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி  காலை 6 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு செல்லுமாறு இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.
கேரளாவில் கண்ணூர் - கோழிக்கோடு பயணிகள் ரயில் ஷொர்னூர் வரை பிப்ரவரி 2ம் தேதி முதல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

குருவாயூர் - திருச்சூர் பயணிகள் ரயில், கொல்லம் - புனலூர் பயணிகள் ரயில் என 2 ரயில்களை இணைத்து ஒரே ரயிலாக குருவாயூர் - புனலூர் பயணிகள் ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. கோட்டயம் - எர்ணாகுளம் (56386/56389) மற்றும் எர்ணாகுளம் - நிலாம்பூர் பயணிகள் ரயில் (56363/56362) ஆகிய 2 ரயில்களையும் கோட்டயம் - நிலாம்பூர் பயணிகள் ரயில் என இணைத்து ஒரே ரயிலாக இயக்கப்படுகிறது. ஆனால் திருநெல்வேலி - நாகர்கோவில் மற்றும் நாகர்கோவில் - கொச்சுவேளி பயணிகள் ரயில்களை இணைத்து ஒரே ரயிலாக திருநெல்வேலி - கொச்சுவேளி என இயக்க வேண்டும்.  திருவனந்தபுரம் - நாகர்கோவில், கன்னியாகுமரி - திருநெல்வேலி ஆகிய 2 பயணிகள் ரயில்களையும் இணைத்து ஒரே ரயிலாக திருவனந்தபுரம் - திருநெல்வேலி என இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறாமல் உள்ளது என்றனர்.

Tags : Kanyakumari ,Kumari District Passengers ,Mumbai ,Thiruvananthapuram , Kanyakumari - Mumbai Express, Kumari District traveler, is at risk of being affected
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு...