×

திருவாரூரில் ஷேர் ஆட்டோக்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

திருவாரூர்: மாவட்ட தலை நகரான திருவாரூரில் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். --30 வார்டுகளை கொண்ட திருவாரூர் நகராட்சி பகுதியில் கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 55 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். அதன் பின்னர் தற்போது 8ஆண்டு காலத்தில் இந்த மக்கள்தொகை அதிகரித்து மாவட்ட தலைநகராக திருவாரூர் இருந்து வருவதால் இங்குள்ள கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் என அரசின் அனைத்து துறை அலுவலகங்கள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மத்திய பல்கலைகழகம் போன்றவை இருந்து வருவதன் காரணமாக நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் வரையில் இந்த நகரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய சூழலில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப நகரங்களும் விரிவாக்கம் ஆகிக்கொண்டே செல்கிறது. திருவாரூர் நகரத்தில் மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

ஆனால்திருவாரூர் நகரின் மையப்பகுதியில் இருந்து புதிய பேருந்து நிலையம் சுமார் 2 கி.மீ. தொலைவில்வுள்ளதாலும் பழைய பேருந்து நிலையம் அருகில் தான் வணிக நிலையங்கள், ரயில் நிலையம், வங்கிகள், கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள் மற்றும் வழிப்பாட்டு தலங்கள் போன்றவை அமைந்துள்ளதாலும் மக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையமாக பழைய பேருந்து நிலையம் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது நாகப்பட்டினம் மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதியில் இருந்து வரும் அனேக பேருந்துகள் ரவுண்டானாவில் பயணிகளை இறக்கி விட்டு பழைய பேருந்து நிலையம் வராமல் புதிய பேருந்து நிலையம் சென்று விடுகின்றன. அதே போல் புதிய பேருந்து நிலையத்திலிருந்து வரும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்கு வருவதில்லை. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

நகர விரிவாக்கம் என்பது காலத்திற்கு ஏற்ற ஒன்று என்றாலும் மக்களுடைய போக்குவரத்து இன்னல்களை குறைக்க வேண்டியது அரசின் தார்மீக கடமையாகும். இன்றைய காலகட்டத்தில் விஷம் போல் ஏறி வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஆட்டோக்கள் கடுமையான அளவிற்கு கட்டணங்களை உயர்த்தி வருகிறது. இதனால் ஆட்டோ பயணம் என்றாலோ பொது மக்களுக்கு கட்டணத்தை நினைத்து அதில் பயணம் மேற்கொள்வதில் அஞ்சுகின்றனர். மேலும் போதுமான அளவிற்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் இவற்றிற்கெல்லாம் ஒரே தீர்வு நகரில் ஷேர் ஆட்டோக்களை இயக்குவதுதான். அதன்படி மயிலாடுதுறை மார்க்கத்தில் கங்களாஞ்சேரி வரையிலும், நாகப்பட்டினம் மார்க்கத்தில் கிடாரங்கொண்டான் வரையிலும், திருத்துறைபூண்டி மார்க்கத்தில் புலிவலம் வரையிலும், தஞ்சை மார்க்கத்தில் அம்மையப்பன் வரையிலும், மன்னார்குடி மார்க்கத்தில் தேவர்கண்டநல்லூர் வரையும், ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டால் பொது மக்கள் குறைந்த கட்டணத்தில் நகரத்திற்கு வந்து செல்வர் என்பதால் இது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, கடந்த 2002ம் ஆண்டுக்கு பின்னர் ஷேர் ஆட்டோக்களை இயக்குவதற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் திருவாரூர் நகரில் அரசு விதித்துள்ள கட்டணத்தின் படி ஆட்டோக்களை இயக்குவதற்கு உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதுகுறித்து மாவட்ட ரயில் மற்றும் பேருந்து உபயோகிப்பாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பேராசிரியர் பாஸ்கரன் கூறுகையில், நாட்டில் தினந்தோறும் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. அதற்கேற்ப அரசு சார்பில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு என்பது இல்லாமல் இருந்து வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை என்பது தினந்தோறும் விஷம் போல் ஏறி வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைவரும் பேருந்து கட்டண உயர்வினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது மட்டுமன்றி தங்களுக்கு ஏற்ப ஆட்டோ கட்டணம் இல்லாததன் காரணமாக ஆட்டோ பயணம் என்பதையும் தவிர்த்து வருகின்றனர். எனவே மாவட்ட தலைநகரான திருவாரூரில் ஷேர் ஆட்டோ விடுவதற்கு மாவட்ட நிர்வாகமும் வட்டார போக்குவரத்து துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Thiruvarur ,Tiros , Thiruvarur, Share Auto
× RELATED வண்டாம்பாளையம் பகுதியில் மனநல காப்பகத்தை கலெக்டர் திடீர் ஆய்வு