×

திருப்பரங்குன்றத்தில் சரவண பொய்கை சுத்தம் செய்யும் பணி கண்துடைப்பா?... ஆய்வின்போது மட்டும் கருவி இயங்குவதாக புகார்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கை குளத்தில் தண்ணீரை சுத்தம் செய்வதற்காக வைக்கப்பட்ட கருவி அதிகாரிகள் ஆய்வின்போது மட்டும் செயல்படுவதாகவும், மற்ற நேரங்களில் பயனற்று கிடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமானது சரவணப்பொய்கை குளம். இந்த குளத்தின் தண்ணீரானது பக்தர்களால் புனித தீர்த்தமாக வணங்கப்பட்டு நீராடி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளத்தில் உள்ள மீன்கள் ஏலம் விடப்பட்டன. அப்போது நடந்த தொழில் போட்டியால் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் குளம் முழுவதும் மாசடைந்தது. இதைத்தொடர்ந்து குளத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்றும், மீன் குத்தகையை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்று குளத்தின் தண்ணீரை சுத்தம் செய்ய மும்பையில் உள்ள பாபா ஆராய்ச்சி கழக நீரியல் மேலாண்மை துணை வல்லுனர்களிடம் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களின் வழிகாட்டுதல்படி விஞ்ஞானி டேனியல் செல்லப்பா தலைமையிலான குழுவினர் சரவண பொய்கையை ஆய்வு செய்து கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் குளத்தின் நடுவில் மின்மோட்டார் மூலம் இயங்கும் ஸ்பிரே கருவியை ஒரு இடத்தில் மட்டும் சோதனைக்காக பொறுத்தினர்.

இந்த கருவி செயல்படுவதன் மூலம் தண்ணீரில் உள்ள ஆக்சிஜன் அளவு அதிகரிப்பதால், நீரில் உள்ள மாசு படிப்படியாக குறைந்து தண்ணீர் சுத்தமாக மாறும் எனவும், இந்த சோதனை சாத்தியமானால் மேலும் 2 இடங்களில் இக்கருவியை பொறுத்தவும் திட்டமிட்டனர். ஆனால் இக்கருவியின் சுத்தம் செய்யும் பணியை துவங்கிய சில நாட்களிலே எவ்வித காரணமின்றி நிறுத்தி விட்டனர். அதன்பின் பாபா ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகள் பார்வையிட வந்த அதே ஆண்டு அக்டோபர் மாதம் மட்டும் ஒரு சில நாட்கள் இயக்கினர்.

அதன்பின் நிறுத்தப்பட்டதாகவும், தொடர்ந்து இந்த ஆண்டு ஜன.20ம் தேதி மாவட்ட கலெக்டர் ஆய்வின் போது இக்கருவியை இயக்கியதாகவும், அதன்பின் மீண்டும் வழக்கம்போல் நிறுத்திவிட்டதாகவும் இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘சரவண பொய்கையில் தண்ணீரை சுத்தம் செய்யும் ஸ்பீரே கருவி கடந்த 6 மாதத்தில் 30 நாட்களுக்கு குறைவான நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பயனற்று கிடந்தால் நீரை சுத்தம் செய்வது சாத்தியமில்லாமலே போய்விடும். மேலும் இச்சோதனை முறையே சரியாக நடைபெறவில்லை என்றால் தண்ணீரின் உண்மையான நச்சுதன்மை தெரியாமல் போய் கடைசில் இத்திட்டத்தை கைவிடும் அபாயம் ஏற்படும். இதற்கு கோயில் அறநிலையத்துறை அலுவலர்களின் அலட்சியப்போக்கே காரணம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த கருவியை தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுத்து சரவணப் பொய்கையை மக்கள் எப்போதும் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும்’என்றனர்.

Tags : Thiruparankundram , Thiruparankundram, Sharavana Lying, Cleaning Work, Eyes?
× RELATED திருப்பரங்குன்றம் அருகே 16ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு