×

வேலூர் பழைய பர்மா பஜார் வழியாக செல்லும் நிக்கல்சன் கால்வாயை முழுமையாக தூர்வார வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வேலூர்: வேலூர் பழைய பர்மா பஜார் வழியாக கடந்து செல்லும் நிக்கல்சன் கால்வாயை அண்ணா சாலை தொடங்கி நேதாஜி ஸ்டேடியம் வரை உள்ள பகுதியில் முழுமையாக தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் நகரில் விஜயநகர அரசர்கள் காலத்தில் மலையில் இருந்து வழிந்தோடி வரும் நீரை முழுமையாக கோட்டை அகழிக்கு திருப்பி அங்கிருந்து உபரி நீரை பாலாற்றில் கொண்டு செல்லும் வழியிலான நீர்வழிப்பாதைகளை அமைத்திருந்தனர். அதன்படி வேலூர் ஓட்டேரி மலை, பகவதி மலை, சலவன்பேட்டை, ஓல்டு டவுன் மலைப்பகுதிகளில் இருந்து வழிந்தோடி வரும் நீர் கானாறுகள் மூலம் வேலூர் வசந்தபுரம் பகுதியில் ஒன்று சேர்ந்து அகழியில் விழுமாறு செய்தனர்.
இந்த கட்டமைப்பு பிரிட்டிஷார் ஆட்சியின்போது மாற்றி அமைக்கப்பட்டது.

அதன்படி, அகழிக்கு செல்லும் நீர் வசந்தபுரம், செல்வபுரம் வழியாக முள்ளிப்பாளையம், கன்சால்பேட்டை, சத்துவாச்சாரி வழியாக பெருமுகை வரை கொண்டு செல்லப்பட்டது. இதுவே அனைத்து கானாறுகளுக்கும் அதை மாற்றிய நிக்கல்சன் என்பவரது பெயரிலேயே நிக்கல்சன் கால்வாய் என்று அழைக்கப்பட்டது. 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல நீர் ஓடும் கானாறுகளாக இருந்த இவை பின்னர் ஆக்கிரமிப்புகளால் சுருங்கி தற்போது கழிவுநீரை கொண்டு செல்லும் கழிவுநீர் கானாறுகளாக உருமாறிப்போயின. அதோடு தூர்வாரப்படாமல் முட்புதர்கள், செடி, கொடிகள் மண்டி, அதில் செல்ல வேண்டிய கழிவுநீர் சாலைகளில் ஓடும் அவலமும் நீடித்து வந்தது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கானாறுகளில் முழுமையாக கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.

ஆனாலும், இதில் சேறும், சகதியும் சேர்ந்து செடி, கொடிகளும், முட்புதர்களும் மீண்டும் பெருகியது. அதேநேரத்தில் அவ்வபோது பொக்லைன் இயந்திரம் மூலம் மாநகராட்சி நிர்வாகம் தூர்வாருவதாக கூறி பிரதான சாலைகளை ஒட்டிய கானாற்று பகுதிகளில் மட்டும் சேற்றையும், சகதியையும் அகற்றுகின்றனர். இதனால் நாளடைவில் மீண்டும் பழைய நிலை திரும்பி விடுகிறது. குறிப்பாக ஓல்டு டவுன் பகுதியில் இருந்தும், பில்டர்பெட் டேங்க் பகுதியில் இருந்து வரும் கானாறுகள் இணைந்து அண்ணா சாலையை கடந்து பழைய பர்மா பஜார், நேதாஜி ஸ்டேடியம் வழியாக வசந்தபுரம் வேலப்பாடியில் இருந்து வரும் கானாற்றுடன் ஒன்றிணைகின்றன. இதில் மாநகராட்சி தூர்வாரும் பணியை அண்ணா சாலை, ஆரணி சாலையை ஒட்டிய கானாறுகளில் மட்டும் மேற்கொள்வதாகவும், கானாற்றின் உட்பகுதியிலும், வசந்தபுரம் பகுதியிலும் தூர்வாருவதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

எனவே, நகரில் உள்ள கழிவுநீர் கானாறுகளை முழுமையாக அதன் தொடக்கம் முதல் முடிவு வரை தூர்வாரி சீரமைக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது இக்கானாறுகளை மீண்டும் நீர்வழிப்பாதைகளாக நிலத்தடி நீர் மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் வேலூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nicholson Canal ,Vellore Old Burma Bazaar Vellore ,Nicholasan ,Burma Bazaar , Vellore, Nicholson Canal
× RELATED வேலூர் முள்ளிப்பாளையம் நிக்கல்சன்...