×

தேவதானப்பட்டி பகுதியில் நெற்பயிரில் நோய் தாக்கும் அபாயம்: வேளாண்துறை ஆய்வு

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி பகுதியில் மஞ்சளாறு அணை பாசன பரப்பு நிலங்களில் தற்போது நெற்பயிர்களில் நோய் தாக்க வாய்ப்புள்ளதாக வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர். தேவதானப்பட்டி பகுதியில் மஞ்சளாறு அணை பாசனம் மூலம் டி.வாடிப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதியில் தற்போது நெல் பயிர்கள் வளர்ச்சி முதல் முதிற்சி பருவம் வரை உள்ளது. தற்போது நிலவும் தட்பவெட்ப நிலை காரணமாக நெல் பயிரில் பூச்சி நோய் தாக்க வாய்ப்புள்ளது. எனவே, நெல் வளர்ச்சி பருவத்தில் இலைச்சுருட்டுபுழு, தாக்குதல் தென்பட்டால் ஏக்கருக்கு ட்ரைசோபாஸ் 500மில்லி அல்லது பிப்ரோனில் 500மில்லி, தெளித்து கட்டுப்படுத்தலாம். இலைச்சுருட்டுபுழு தாக்குதலை கட்டுப்படுத்த ட்ரைக்கோகிரம்மா கைலோனில் முட்டை ஒட்டுண்ணியை பயன்படுத்தலாம். குருத்துப்பூச்சி தாக்குதல் தென்பட்டால் ஏக்கருக்கு அசிபேட் 400கிராம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

குருத்துப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ட்ரைக்கோகிரம்மா ஜப்பானிகம் முட்டை ஒட்டுண்ணியை பயன்படுத்தலாம். குலைநோய் தாக்குதல் தென்பட்டால் ஏக்கருக்கு ட்ரைசைக்ளோசோல் 120கிராம் அல்லது கார்பன்டசிம் 100கிராம் தெளித்து கட்டுப்படுத்தலாம். இலையுறை கருகல் நோய் தாக்கல் தென்பட்டால் ஏக்கருக்கு ஹெக்சகனசோல் 400மில்லி தெளித்து கட்டுப்படுத்தலாம். செம்புள்ளி நோய் தென்பட்டால் ஏக்கருக்கு காப்பர்ஆக்ஜி குளோரைடு 400கிராம் தெளித்து கட்டுப்படுத்தலாம். பாக்டீரியா இலை கருகல் நோய் தென்பட்டால் ஏக்கருக்கு ஸ்ட்ரொப்டோமைசின் சல்பேட், டெட்ராசைக்கிளின் கலவை 120 கிராம் + காப்பர் ஆக்ஜிகுளோரைடு 500கிராம் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

பெரியகுளம் வட்டாரத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஒருங்கிணைந்த பூச்சி நோய் பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து பூச்சி நோய்களை கட்டுப்படுத்தும்படி பெரியகுளம் வேளாண்மை உதவி இயக்குனர் சென்றாயன் தெரிவித்துள்ளார்.

Tags : Devadanapatti , Devadanapatti, Rice Disease, Risk
× RELATED விவசாயிகளுக்கு பயிற்சி