×

ஒட்டன்சத்திரத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை: ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்

ஒட்டன்சத்திரம்: ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள 5 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி சேதமடைந்துள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய சாலைகள் அனைத்தையும் சீரமைப்பது என, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் முதல் கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் அய்யம்மாள், துணைத் தலைவர் காயத்திரிதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், மகேந்திரன் (கி.ஊ) ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு, மலைக்கிராமங்கள் சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் நிறைவேறாமல் உள்ளது. இங்குள்ள உறுப்பினர்கள் அதனைக் கருத்தில் கொண்டு அந்தந்த கிராமங்களைப் பார்வையிட்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டு, கட்சி பாகுபாடின்றி அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்று பேசினார்.

இக்கூட்டத்தில், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டு, குடிப்பதற்கு குடிநீர் இன்றி மிகவும் சிரமத்தில் பொதுமக்கள் உள்ளனர். 2008ம் ஆண்டு திமுக ஆட்சியில் வேடசந்தூர் காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 101 மற்றும் 93 குடியிருப்புகளுக்கு இரண்டு பேக்கேஜ்களாக பிரிக்கப்பட்டு, குடிநீர் இணைப்பிற்கான குழாய்கள் பதிக்கப்பட்டு இத்திட்டத்தின் முழுமையாக பொதுமக்களுக்கு குடிநீர் முழுமையாக சென்றடையவில்லை. இத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியத்திற்கு முன்மொழிவது. தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவ படத்தை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இடம்பெறச் செய்வது. வடகாடு ஊராட்சியில் உள்ள பொதுமக்களின் குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்ய பரப்பலாறு அணையில் ஒரு சமூதாயக் கிணறு வெட்டப்பட்டு,

வடகாடு ஊராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பைப்லைன் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மூலமாக ஊரக வளர்ச்சித்துறை செயலருக்கு முன்மொழிவுகள் அனுப்புவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள 5 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி சேதமடைந்துள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய சாலைகள் அனைத்தையும் சீரமைப்பது. ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் நெடுஞ்சாலையுடன் இணையும் ஊராட்சி ஒன்றிய சாலையையும், பேருந்து செல்லும் அளவில் உள்ள ஊராட்சி ஒன்றிய சாலைகளை நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பது. ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் பழைய கட்டிடமாக உள்ளதால் கூட்டரங்கத்தில் போதிய இடவசதி இல்லாத காரணத்தினாலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஊரக வளர்ச்சித்துறை செயலருக்கு மாவட்ட ஆட்சியர் மூலமாக முன்மொழிதல் அனுப்புவது.

சத்திரப்பட்டி ஊராட்சியில் 1996ம் ஆண்டு வீரலப்பட்டி பிரிவு எதிரே கலைஞர்நகர் என்ற பகுதியில் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான இடத்தில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். அவர்களுக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இடத்தை குடியிருக்கும் நபர்களுக்கு பட்டா வழங்க ஊராக வளர்ச்சித்துறை செயலாளருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் பட்டா வழங்க முன்மொழிதல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் 20 ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : roads ,meeting ,Panchayat Union ,Panchayat Union Meeting , Otten, damaged road, resolution
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...