×

ஆர்.எஸ்.புரத்தில் ரூ.42 கோடியில் நடக்கும் மல்டிலெவல் பார்க்கிங் பணி மந்தம்: விரைந்து முடிக்க கோரிக்கை

கோவை: கோவை மாநகரில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என சுமார் 15 லட்சம் வாகனங்கள் கோவை மாநகரின் பிரதான சாலைகளான காந்திபுரம், டவுன்ஹால், உக்கடம், ரயில் நிலையம், ராமநாதபுரம், ஆர்.எஸ். புரம் போன்ற பகுதிகளில் இயங்குகின்றன. ஆண்டுதோறும் புதிதாக 1.5 லட்சம் வாகனங்கள் கோவை மாநகரில் பதிவு செய்யப்படுகின்றன என வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். வாகனங்களின் எண்ணிக்கை காரணமாக போக்குவரத்து நெரிசல் மாநகரில் கடுமையாக உள்ளது.கோவை மாநகர பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், வணிக வளாகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், உணவு விடுதிகள், மருத்துவமனைகள் என வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்தி சென்று விடுகின்றனர்.

இதற்கு பிரதான காரணமாக அவர்கள் வைக்கும் புகார் வாகன நிறுத்த போதிய அளவு பார்க்கிங் வசதி இல்லை என்பதே. கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி சாலை, அவிநாசி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பாலக்காடு சாலை, நஞ்சப்பா சாலை, பொள்ளாச்சி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட சாலைகளின் ஓரம் வாகனங்கள் அதிக அளவு நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அலுவலகம் செல்ல காலதாமதம் ஏற்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். கோவை மாநகரில் பல இடங்களில் வாகனங்களை நிறுத்த குறிப்பிட்ட இடங்களை காவல்துறையினர் ஒதுக்கியுள்ளனர். ஆனால், அவை போதுமானதாக இல்லை. அரசு  மற்றும் தனியார் நிறுவனங்கள் வாகன நிறுத்துமிடங்களை ஏற்படுத்தியிருந்தாலும் வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி இல்லை. இதற்கு தீர்வாக பல் அடுக்கு (மல்டி லெவல்) பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதன் ஒரு பகுதியாக கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் மல்டிலெவல் கார் பார்க்கிங் ரூ.42 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சியால் கட்டப்பட்டு வருகிறது.

முன்னதாக ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் 11 ஆயிரம் சதுர மீட்டரில் 1,990 இரு சக்கர வாகனங்கள், 979 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் 4 தளங்களுடன் கூடிய மல்டி லெவல் பார்க்கிங் கட்ட ரூ.69.80 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டது. ஆனால், திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனத்தினர் தயங்கினர். மல்டி லெவல் பார்க்கிங் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகத்தினரே கட்டி பராமரிப்புக்காக தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் இத்திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட பணிகள் இன்னமும் நிறைவு பெறாமல் மந்த கதியில் நடக்கிறது.கட்டுமான ெபாருட்கள் சரியாக கிடைக்காததாலும், நிதி கிடைக்காததாலும் பார்க்கிங் கட்டுமான பணி மந்தமாக நடக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் பணிகளை முடித்து பார்க்கிங்கை பயன்பாட்டுக்கு விட்டால் வசதியாக இருக்கும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

எனவே பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் மல்டி லெவல் பார்க்கிங் திட்டம் ரூ.42 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சியால் கட்டப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக இதில் 370 கார்கள் நிறுத்தப்படும். 4 அடுக்கு கொண்டதாக இந்த மல்டி லெவல் பார்க்கிங் அமைக்கப்படும். விரைவில் இந்த பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

Tags : RS Puram ,RSPuram ,completion , RS Puram, Multilevel Parking Work, Mantra
× RELATED அரசு பள்ளி ஆசிரியர் பணி நிறைவு விழா