×

அரிமளம், திருமயம் பகுதியில் தண்ணீர் இருந்தும் பருவம் தவறியதால் எதிர்பார்த்த நெல் விளைச்சல் இல்லை: விவசாயிகள் வேதனை

திருமயம்: அரிமளம், திருமயம் பகுதிகளில் விவசாயத்துக்கு போதுமான தண்ணீர் இருந்தும் பருவம் தவறியதால் எதிர்பார்த்த அளவு நெல் விளைச்சல் இல்லையென விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் இயற்கையில் பல்வேறு மாறுபாடுகள் ஏற்பட்டு வருகிறது. இயற்கையின் மாற்றத்திற்கு ஏற்ப மக்களும் தங்களை மாற்றி கொண்டே செல்கின்றனர். இதனால் எதிர்வரும் காலங்களில் மனித இனம் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதை மெய்ப்பிக்கும் வகையில் நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம் பகுதிகளில் பருவமழையை நம்பியே அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் பருவநிலை மாற்றத்தால் பருவமழை இரண்டு, மூன்று மாதம் தாமதமாக பெய்ய தொடங்கியது. அவ்வாறு பெய்யும் மழையும் போதுமானதாக இல்லாததால் பெரும்பாலான விவசாயிகளை கொண்டிருந்த அரிமளம், திருமயம் பகுதி கிராமங்களில் தற்போது அரிதாகவே விவசாயம் செய்யப்படுகிறது. இதற்கும் போதுமான நீர் பாசனம் இல்லாததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு இன்னல்களை அப்பகுதி விவசாயிகள் சந்தித்து வருவதோடு விவசாயத்தால் எந்த லாபமும், பயனும் இல்லையென மீதமுள்ள விவசாயிகளும் விவசாயத்தை உதறி தள்ளும் அளவுக்கு வந்துள்ளது வேதனையளிக்கும் விஷயமாக உள்ளது.

இதனிடையே கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில் நடப்பாண்டு அரிமளம், திருமயம் பகுதியில் வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே பருவமழை பெய்தது. இருந்தபோதிலும் சம்பா பருவம் முடிந்த பின்னர் மழை பெய்ததால் விவசாயிகள் வேறு வழியின்றி சம்பா பருவத்துக்கும், குறுவை சாகுபடிக்கும் இடையே ஒரு காலத்தில் நெல் நடவு செய்தனர். ஆனால் நடவு செய்த நாளில் இருந்து பயிர் வளர்ச்சி சரி இல்லாததால் அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். ஆனால் விவசாயிகள் எதிர்பார்த்த அளவு நெல் பயிர் வளர்ச்சி இல்லாத நிலையில் புகையான், பழ அழுகல், குலை அழுகல் உள்ளிட்ட புதுப்புது நோய்களை விவசாயிகள் கட்டுப்படுத்த முடியாததால் விவசாயத்தால் அரிமளம், திருமயம் பகுதி விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றனர். இதனால் ஒரு ஏக்கருக்கு 35 மூட்டை நெல் அறுவடை செய்ய வேண்டி நிலையில் 20 மூட்டை விளைச்சல் காண்பதே கடினமாக உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கூலி, உரம் உள்ளிட்ட செலவினங்களை கணக்கு செய்து பார்க்கும்போது விவசாயிகளுக்கு மிச்சம் இருப்பது கவலையும், கடனும் தான் என புலம்புகின்றனர். மேலும் கடந்த ஆண்டுகளை போல் வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குவது குறைந்துள்ளது, புதுவித நோய்களை முன் கூட்டியே அறிவிப்பது, வந்த நோய்களை கட்டுப்படுத்துவதில் தவறி விட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனிடையே தற்போது அரிமளம், திருமயம் பகுதிகளில் ஒரு சில கிராமங்களில் நெல் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் கிணறு பாசனமுள்ள விவசாயிகள் கோடை நடவுக்கு தயாராகி வருகின்றனர்.

Tags : Arimalam ,season ,Thirumayam , Arimalam, Thirumayam, Paddy Yield, Farmers, Pain
× RELATED அரிமளம் அம்மன் கோயிலில் பங்குனி...