×

இயந்திரம், தொழிலாளிகள் பற்றாக்குறையால் மானூர் பகுதியில் நெல் அறுவடை பணிகள் பாதிப்பு

மானூர்: நெல்லை மாவட்டத்தின் பெரிய தாலுகாவில் ஒன்றான மானூர் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த பகுதியாகும். இங்குள்ள பெரியகுளம் நிரம்பினால் மூன்று போகம் விளைச்சல் கிடைக்கும். சிற்றாற்றிலிருந்து தண்ணீர் வரும் பாதைகள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததால் மானூர் குளம் பல ஆண்டுகளாக நிரம்பாமல் விவசாயம் பொய்த்துப் போயிருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு நெல்லை மாவட்ட நிர்வாகம், அண்ணா பல்கலை மற்றும் சமூக ஆர்வலர்கள் மேற்கொண்ட முயற்சியால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு குளத்திற்கு தண்ணீர் முழுமையாக வந்தது. வடகிழக்கு பருவமழையும் முழுமையாக பெய்ததால் பல ஆண்டுகளுக்குப் பின் குளம் நிரம்பி மறுகால் பாய்ந்தது. மானூர் குளத்தின் மூலம் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

80 சதவீத மானாவாரி நிலங்களில் பயறு, உளுந்து, சோளம் போன்றவையும் புஞ்சை நிலங்களில் கிணற்று பாசனம், குளத்து பாசானம்  மூலம் நெல் மற்றும் பணப்பயிரான பூ போன்றவையும் நடவு செய்துள்ளனர். தண்ணீர் தடையின்றி கிடைத்ததால் நடப்பட்ட நெல் பல இடங்களில் அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் விவசாயி கூலி ஆட்கள் மற்றும் இயந்திரங்கள் தட்டுப்பாட்டால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயி சந்திரபாண்டி  கூறுகையில், நடப்பான்டில் போதுமான மழை பெய்ததால் ஏராளமான இடங்களில் நெல் நடவு செய்யப்பட்டு  அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் கூலியாட்கள் கிடைப்பதில்லை. இதனால் இயந்திரத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அறுவடை குறித்த காலத்தில் நடக்காததால் நெற்பயிர்கள் குலை தாங்காமல் சாய்ந்து கிடக்கிறது.

சில இடங்களில் வயல் பகுதியில் தண்ணீர் நிற்பதால் சாதாரண இயந்திரம் கொண்டு அறுவடை செய்ய இயலாமல் செயின் வீல்  பொறுத்தப்பட்ட இயந்திரத்தின் மூலம் மட்டுமே அறுவடை செய்ய இயலும். அவ்வாறு அறுவடை செய்யும் போது அதிகமான நெல் பயிர்கள் உதிர்ந்தும் இயந்திரத்தின் மூலம் நசுக்கப்பட்டும்  வீணாகும். இயந்திர கூலி மணிக்கு ரூ. 2600 செலவு செய்த போதிலும் 1 மணி நேரத்தில் அறுவடை செய்ய வேண்டிய ஒரு ஏக்கர் நிலம் வயல் பகுதி காயாமல் சதுப்பு நிலமாக இருப்பதால் 3 மணி நேரம் அறுவடை செய்யவேண்டியது உள்ளது. விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவு செய்து நெல் நடவு செய்யும் போது  73 கிலோ கொண்ட 40 மூடைகள் விளைச்சல் கிடைக்க வேண்டிய நிலையில் 20 மூடைகள் கூட கிடைப்பதில்லை.  தற்போது பல இடங்களில் நெல்பழம் என்ற நோய் தாக்கத்தால்  அதிகமான நெல் மணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இது போன்று பல்வேறு வகையில் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருவதால் செலவு செய்த பணத்தை கூட பெற முடியாமல் திண்டாடி வருகின்றனர் என்றார்.

Tags : area ,paddy harvesting ,Manoor , Manure, Paddy Harvesting, Impact
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...