×

ஒரே நாளில் 70 பேரை பலி வாங்கிய கொரோனா வைரஸ்; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 560 ஆக அதிகரிப்பு

பீஜிங்: சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் வுகான் நகரில் கடந்த டிசம்பரில் இறுதியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. சார்ஸ் போன்ற ஆட்கொல்லியான இந்த வைரஸ் தாக்குதலுக்கு மக்கள் கொத்து கொத்தாக பலியாகி வருகின்றனர். நேற்று மட்டும் வுகானில் 70 பேர் பலியாகி இருப்பதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 560 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 3,887 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 28,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால், உண்மையான பலி எண்ணிக்கையையும், பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையையும் சீன அரசு மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உண்மையான பலி எண்ணிக்கையும், பாதித்தவர்களின் எண்ணிக்கையும் பல ஆயிரத்தை தாண்டி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  கொரோனா வைரசுக்காக வுகானில் 10 நாளில் 1000 படுக்கை வசதி கொண்ட பிரமாண்ட மருத்துவமனையை சீன அரசு கட்டி முடித்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு தற்போது நோயாளிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.

சீனா மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் கொரோனா பரவி வருகிறது. இதனால் சீனாவிலிருந்து வருபவர்களை உலக நாடுகள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துகின்றன. கொரோனா வைரஸ் தாக்குதல், சீனாவுக்கு வர்த்தக ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி இருக்கிறது. இதனால், அந்நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு வருகிறது. உலக நாடுகள் எதுவும்.,  அந்நாட்டிடம் இருந்து வாங்கும் பொருட்களை நிறுத்தி விட்டன. இந்நிலையில், இந்நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ ஆய்வாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Tags : Wukan ,China , China, Coronavirus, Wukan, 560 killed
× RELATED சீனாவில் மலைப்பாதை சாலை சரிந்து...