×

ஜனநாயக நாட்டில்தான் இன்னும் இருக்கிறோமா? : பிரியங்கா சந்தேகம்

புதுடெல்லி: ‘முன்னாள் ஜம்மு முதல்வர்கள் 6 மாதமாக வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனரே, நாம் இன்னும் ஜனநாயக நாட்டில் தான் இருக்கிறோமா?’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.  ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 6 மாதங்கள் ஆகியும் இவர்கள் விடுவிக்கப்படாதது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘எந்த குற்றச்சாட்டும் இன்றி கடந்த 6 மாதங்களாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். 6 மாதங்களுக்கு முன்பு இது எத்தனை நாட்கள் தொடரும் என கேட்டோம். இப்போது நாம் ஜனநாயக நாட்டில்தான் இருக்கிறோமா?’ என கூறியுள்ளார். வீட்டுச்சிறையில் இருந்த பல்ேவறு கட்சிகளை சேர்ந்த 2ம் கட்டத் தலைவர்கள் மட்டுமே, போராட்டங்களில் ஈடுபட மாட்டோம் என்று அரசிடம் உறுதி அளித்து விட்டு விடுதலையாகி வருகின்றனர். இதுவரை, 13 தலைவர்களை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் விடுவித்துள்ளது. ஆனால்  முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் தொடர்ந்து வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Tags : country ,Priyanka , democratic country,Priyanka is skeptical
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!