×
Saravana Stores

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு ராமர் கோயில் கட்ட அறக்கட்டளை அமைப்பு : சன்னி வக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் தேர்வு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் நேற்று அறிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று காலை நடந்தது. கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி நேராக நாடாளுமன்றத்திற்கு வந்தார். அப்போது, மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கி இருந்த நிலையில், பிரதமர் பேசியதாவது: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான 15 பேர் கொண்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. அறக்கட்டளைக்கு “ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா” என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவில் வசிக்கும், இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சமணர்கள் உட்பட அனைத்து மதத்தினரும், ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்கள். வளர்ச்சி என்பது, ஒரு குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்குமானது என்பதில், இந்த அரசு உறுதிப்பாட்டுடன் உள்ளது. இதன் காரணமாகவே, ‘அனைத்து வளர்ச்சி, அனைவருக்குமான வளர்ச்சி’ என்ற தாரக மந்திரத்துடன் ஒவ்வொரு இந்தியர்களுக்காகவும் அரசு பாடுபட்டு வருகிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, 5 ஏக்கர் பரப்பளவில் ராமர் கோயில் கட்டுவதற்கான செயல் திட்டம், மத்திய அரசிடம் தயாராக உள்ளது. இதற்காக மொத்தமுள்ள 67.703 ஏக்கர் நிலமும் புதிதாக அமைக்கப்படும் அறக்கட்டளையிடம் வழங்கப்படும். அதே சமயம், உபி சன்னி வக்பு வாரியத்திற்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 5 ஏக்கர் நிலம் வழங்க உத்தரப் பிரதேச அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடியின் அறிவிப்பின் போது, ஆளும் தரப்பு எம்பி.க்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ‘ஜெய்ஸ்ரீராம், ஜெய்ஸ்ரீராம்’ என உரக்க கோஷமிட்டனர். இந்த விவகாரத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநில அமைச்சரவை கூட்டம் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நேற்று நடந்தது. இதில், சன்னி வக்பு வாரியத்திற்கு வழங்குவதற்கான 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அரசின் செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் சர்மா அறிவித்தார்.

அயோத்தியில் இருந்து 18 கிமீ தொலைவில் லக்னோ நெடுஞ்சாலையில் தன்னிபூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை உபி அரசு தேர்வு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். மாநில அரசு 3 இடங்களை தேர்வு செய்து அனுப்பியதாகவும், அதில் தன்னிபூர் கிராமத்தை மத்திய அரசு தேர்வு செய்ததாகவும் அவர் கூறினார். தேர்வு செய்யப்பட்டுள்ள அந்த இடத்தில் நல்ல போக்குவரத்து வசதிகள் இருப்பதாகவும், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கான நில ஒதுக்கீடு ஆவணங்களை உபி அரசு, சன்னி வக்பு வாரியத்திற்கு நேற்று அனுப்பி வைத்தது. ராமர் கோயில் அறக்கட்டளை அமைக்கப்பட்ட தகவல் வெளியானதைத் தொடர்ந்து மீண்டும் இவ்விவகாரம் சூடுபிடித்துள்ளது. அறக்கட்டளை அமைத்தது தொடர்பான முடிவை வெளியிட்ட பிரதமர் மோடிக்கு பல்வேறு தலைவர்களும் பாராட்டு, வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

டெல்லி தேர்தலுடன் தொடர்பு இல்லை


டெல்லியில் வரும் 8ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், ராமர் கோயில் அறக்கட்டளை தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், டெல்லி தேர்தலுடன் இதை சம்பந்தப்படுத்த முடியாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக எடுத்துள்ள முடிவு இது. டெல்லிக்காக அல்ல. நாடு முழுவதும் ஒன்றும் தேர்தல் நடக்கவில்லை. எனவே, இரு வெவ்வேறு விஷயத்தையும் சேர்த்து குழப்பிக் கொள்ளாதீர்கள்,’’ என்றார். இதேபோல், டெல்லி தேர்தலுக்காக மத்திய அரசு தனது அறிவிப்பை வெளியிட அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என தேர்தல் ஆணையமும் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா ஊழியர்களுக்கு அமைச்சரவை பாராட்டு

கொரோனா வைரஸ் பரவிய சீனாவின் வுகான் நகரத்தில் இருந்து 647 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானத்தில் பத்திரமாக திரும்ப அழைத்து வரப்பட்டனர். இதற்காக ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்களுக்கு மத்திய அமைச்சரவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ‘சீனாவில் இருந்து திரும்பியவர்களுடன் ஏர் இந்தியா விமான ஊழியர்கள் 12 மணி நேரம் பயணம் செய்துள்ளனர். அவர்களில் யாராவது ஒருவர் பயந்திருந்தாலும், ‘நான் ஏன் சீனா செல்ல வேண்டும். கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து பரவும் வைரஸ் என்பதால் அங்கிருந்து வரும் போது எனக்கும் தொற்றிக் கொண்டால் என்ன செய்வேன்?’ என கேட்டிருப்பார்கள். ஆனால், எந்த ஊழியரும் கேள்வி கேட்காமல், அங்கிருந்தவர்களை பத்திரமாக மீட்டு வந்துள்ளனர்,’ என அமைச்சரவையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

சன்னி வக்பு வாரியத்தின் முடிவுக்கு பொறுப்பல்ல

உபி ஷியா வக்பு வாரிய தலைவர் வாசிம் ரிஸ்வி நேற்று அளித்த பேட்டியில், ‘‘அரசு தனது பொறுப்பை நிறைவேற்றி இருக்கிறது. அயோத்தியில் இந்து சமூகத்தினர் ராமர் கோயில் பெறப் போகிறார்கள். அந்த இடம் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு வர வேண்டியது. ஆனால், ஷியா பிரிவினர் குரல் கொடுக்காததால் சன்னி பிரிவுக்கு சென்று விட்டது. அரசு தரும் 5 ஏக்கர் எங்களுக்கு கிடைத்தால் அதில் நாங்கள் இன்னொரு ராமர் கோயிலை கட்டுவோம்,’’ என்றார்.
அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர் மவுலானா யாசின் உஸ்மானி நேற்று அளித்த பேட்டியில், ‘‘அரசு தரும் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம் ஏற்றுக் கொண்டால் அதை அனைத்து முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்டதாக அர்த்தமாகாது. சன்னி வக்பு வாரியம் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதி அல்ல. அவர்கள் நிலத்தை பெற்றுக் கொண்டாலும் அந்த முடிவுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை,’’ என்றார்.

அறக்கட்டளையில் 15 உறுப்பினர்கள்


பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பதிவில், ‘ராமர் கோயிலுக்கான அறக்கட்டளையில் 15 உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பர். அதில் ஒருவர் தலித் சமூகத்தை சேர்ந்தவராக இருப்பார். இந்த அறக்கட்டளை கோயில் தொடர்பான முடிவுகளை முழு சுதந்திரத்துடன் எடுக்கும். அறக்கட்டளை அமைத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். லட்சக்கணக்கான மக்களின் நூற்றாண்டு கனவு விரைவில் நனவாகப் போகிறது. ராமர் பிறந்த இடத்தில் விரைவில் நாம் அவரை தரிசனம் செய்யலாம்,’ என்று கூறியுள்ளார்.

பராசரன் வீட்டில் அலுவலகம்


ராமர் கோயில் அறக்கட்டளையின் அலுவலகம் டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இந்த அலுவலகம் அமையும் இடம், முன்னாள் அட்டர்னி ஜெனரல் பராசரனுக்கு சொந்தமான வீடு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ராம ஜென்பூமி வழக்கில் ராம் லாலா அமைப்பின் சார்பில் இவர்தான் வாதிட்டார்.

Tags : Modi ,Modi Announces ,land ,Parliament ,Wakpu Board ,Parliament Parliamentary Trust Foundation , Prime Minister Modi announces ,Parliament Parliamentary, Trust Foundation
× RELATED ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு