×

அரபு நாடுகளைப்போல குழந்தைகள் ஆபாச வெப்சைட்களை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் : திமுக எம்பி தயாநிதி மாறன் வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘‘ஐக்கிய அரபு நாடுகளைப் போல இந்தியாவிலும் குழந்தைகள் ஆபாச இணையதளங்களை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்’’ என்று மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் மக்களவையில் வலியுறுத்தினார். மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தில் அவர் பேசியதாவது: மத்திய அரசும், நீதிமன்றமும் குழந்தைகள் ஆபாச இணையதளங்களை தடை செய்வதற்கான நடவடிக்கையையும், சட்டங்களையும் இயற்றிய பின்னரும் இன்னமும் பல நபர்கள் விபிஎன் எனப்படும் தனியார் இணையதள சேவைகளின் மூலம் மாற்று வழி சேவை வழியாக மிக எளிதில் ஆபாச இணையதளங்களை பார்த்து வருகின்றனர். மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பிறகும், விதிமுறைகளை கடைபிடிக்காமலும், மரபுகளை மீறியும் மேற்கண்ட சேவைகளின் வாயிலாக ஆபாச இணையதளங்களை உபயோகிக்கின்றனர் என்பதை மத்திய அரசு அறியுமா? மேலும், ஐக்கிய அரபு நாடுகளிலும், சீனாவிலும் நடைமுறையில் உள்ளது போன்று இந்தியாவிலும் விபிஎன் சேவைகள் மூலம் ஆபாச படங்கள் பார்ப்பதை தடை செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதிலளித்த மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘‘இந்தியாவை சீனாவுடனோ, மத்திய கிழக்கு நாடுகளுடனோ ஒப்பிட முடியாது. ஏனெனில் நாம் ஜனநாயக நாட்டில் இருக்கிறோம். ஆனாலும், ஆபாச இணையதளங்கள் குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான ஆபாச இணையதள விவகாரங்கள் தீவிரமானவை. அவை நிச்சயம் தடுக்கப்பட வேண்டும். பழிவாங்குவதற்கான மார்பிங் மூலமாக ஆபாசமாக சித்தரிப்பது நாட்டில் அதிகரித்து வருகிறது. எனவே ஆபாச இணையதளங்களை முடக்கவும், மார்பிங் படங்கள் சமூக வலைதளங்களில் பரப்புவதையும் தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் பொய் செய்திகள், தேச விரோத செய்திகள் பரப்புவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.சமூக வலைதள பிரச்னைகள் தொடர்பாக தீவிர விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியம் என சபாநாயகர் ஓம் பிர்லாவும் வலியுறுத்தினார். சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துவது தொடர்பாக விரிவான விவாதம் நடத்த அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் ஒப்புக் கொண்டார்.

சமூக வலைதள கணக்கு ஆதாருடன் இணைப்பா?


சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா என்ற கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘‘பொய் செய்திகள் மற்றும் ஆபாசப் படங்கள் பரப்பப்படுவதை கண்டறியவும், தடுக்கவும் சமூக வலைதள கணக்குடன் ஆதாரை இணைக்கும் பரிந்துரை எதுவும் அரசிடம் இல்லை’’ என தெரிவித்தார்.

Tags : Dayanidhi Maran ,countries ,Arab ,DMK ,children , Like Arab countries, children should be permanently banned , viewing pornographic websites:
× RELATED அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி...