×

சட்டமன்ற தேர்தலில் 80 தொகுதிகளில் வெற்றி பெற்று பாமக ஆட்சியை பிடிக்கும் : அதிமுக கூட்டணியில் போர்க்கொடி தூக்கினார் ராமதாஸ்

சென்னை: பாமகவின் வடக்கு மண்டல செயற்குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்டு, பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:பாமக கட்சியை தொடங்கி 32 ஆண்டுகளில் இதுவரை ஒருமுறை கூட நமது கட்சி ஆட்சிக்கு வரவில்லை. 2021ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், 70 முதல் 80 சட்ட மன்ற தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றால் பாமக ஆட்சியை பிடிக்கும். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.  இந்த வெற்றிக்காக நாம் திட்டமிட வேண்டும். பாமக ஆட்சி அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த முடியாத நிர்வாகிகள் கட்சியில் ஒதுங்கி கொள்ளுங்கள். திறமை உள்ள பாமக நிர்வாகிகள் கடினமாக உழைத்தால், தமிழகத்தில் வேறு கட்சிகளுக்கு வேலை இருக்காத நிலை ஏற்படும். தமிழகத்தில் மூன்றாவது இடத்தில் உள்ள பாமக முதலாவது இடத்திற்கு தாவ வேண்டும். அதற்கு கட்சியினரின் கடின உழைப்பு தேவை.இந்த முறை நாம் கண்டிப்பாக ஆட்சிக்கு வந்தாக வேண்டும்.  தொகுதிக்கு தலா ஒரு லட்சம் வாக்காளர்களை நாம் பெற வேண்டும்.

மேலும், கடந்த தேர்தல்களில் நாம் தனியாக போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது கேவலமாக உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும். நிர்வாகிகள், தொண்டர்களின் உழைப்பு பாமகவின் வெற்றியாக இருக்க வேண்டும். ஒவ்வோரு மாதமும் பாமக நிர்வாகிகளுக்கான தணிக்கை கூட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, தற்போது திடீரென்று வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதனால் அதிமுக கூட்டணியில் மீண்டும் குழப்பத்தை பாமக ஆரம்பித்துள்ளது. அதிக சீட்டுக்காக இந்த மோதல் போக்கை ஆரம்பித்துள்ளதா அல்லது உண்மையிலேயே கூட்டணியில் இருந்து வெளியேற திட்டமிட்டுள்ளதா என்ற பரபரப்பு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தேமுதிகவும் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் பாமகவும் போர்க்கொடி தூக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Ramadas ,assembly election , Winning 80 seats, assembly election
× RELATED ஓவர் கான்பிடன்ஸ் வேணாம்..! தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்