×

எஸ்.ஐயை தாக்கிய மாணவன் விடுவிப்பு: போலீசார் அதிர்ச்சி

அண்ணாநகர்: சென்னை அமைந்தகரை பகுதியில் நேற்று முன்தினம் மாலை அமைந்தகரை காவல் நிலைய சப்.இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் தலைமை காவலர் ஏழுமலை உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது பைக்கில் ஒரு பெண்ணுடன் வந்த கல்லூரி மாணவன் திடீரென தலைமை காவலர் ஏழுமலை மீது மோதியுள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் நடுரோட்டில் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.
உடனடியாக சப்.இன்ஸ்பெக்டர் வந்து இருவரையும் விலக்கி விட்டபோது அவரையும் அந்த கல்லூரி மாணவர் தாக்கியதாக கூறப்படுகிறது. எனவே போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து அமைந்தகரை போலீஸ் நிலையத்தில்  ஒப்படைத்தனர்.

விசாரணையில் அமைந்தகரை தனியார் கல்லூரியில் படிக்கும் 18 வயது மாணவன் என்பதும், டி.பி. சத்திரம் போலீஸ் குடியிருப்பில் வசிப்பதும் தெரியவந்தது. மேலும் மாணவனின் தாய் பூக்கடை காவல் நிலையத்தில் தலைமை காவலராக  பணிபுரிந்து வருவதும், தந்தை மத்திய அரசு போலீசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து மாணவனின் செயலுக்கு அவரது பெற்றோர் காவல் நிலையத்திற்கு சென்று மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.  இதனால் மாணவன் மீது வழக்கு பதிவு செய்யாமல் அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. போலீஸ் எஸ்.ஐ மற்றும் தலைமை காவலரை தாக்கிய மாணவன் வழக்கு எதுவும் இல்லாமல் ‘‘கெத்தாக’’ சென்ற சம்பவம் போலீஸ் வட்டாரத்தில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Student ,SI ,Esaiyai ,student student , SI, student release, police
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...