×

டிஎன்பிஎஸ்சி மோசடிக்கு உடந்தை சித்தாண்டி நண்பர் ஆயுதப்படை காவலர் பூபதி உட்பட 2 பேர் கைது

* உயரதிகாரிகளின் பட்டியல் தயாராகிறது
* செல்போனில் முக்கிய ஆதாரம் சிக்கியது

சென்னை: குரூப் 4 மற்றும் குரூப்2ஏ தேர்வு முறைகேட்டில் சித்தாண்டிக்கு உதவி செய்த ஆயுதப்படை காவலர் பூபதி மற்றும் மோசடியாக வெற்றி பெற்ற அரசு ஊழியர் என 2 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மேலும், சித்தாண்டி  அளித்த வாக்குமூலத்தின் படி மோசடிக்கு உடந்தையாக இருந்த உயரதிகாரிகள் யார் யார் என்பது குறித்த பட்டியலை சிபிசிஐடி போலீசார் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு வாரங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த  சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் அவரது நேற்று முன்தினம் கைது செய்தனர். உயர் அதிகாரிகள் துணையுடன் தான் மோசடி நடந்தது என்றும், வசூலிக்கப்பட்டதில் பாதி பணம் எந்தெந்த உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது என்பதையும்  சித்தாண்டி விசாரணையில்தெரிவித்துள்ளார். சித்தாண்டி குரூப் 2ஏ தேர்வில் 7 பேரிடம் 82 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை வசூலித்து அதை தனது காவல் நண்பரான முத்துகுமார் மூலம் விழுப்புரம் மாவட்டம் அரியூர் கிராம நிர்வாக அலுவலர்  நாராயணன்(எ)சக்தி என்பவரிடம் கொடுத்து ஜெயகுமாரிடம் பணத்தை சேர்த்துள்ளார்.

குரூப் 4 தேர்வில் 15 பேரிடம் நேரடியாக தலா ரூ.7.50 லட்சம் பணத்தை பெற்று ஜெயகுமாரிடம் கொடுத்ததும் தெரியவந்தது. இதுதவிர சித்தாண்டியின் நண்பரான திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த சென்னை  ஆயதப்படை காவலர் பூபதி மூலம் குரூப் 2ஏ தேர்வில் 5 பேரிடம் ரூ.55 லட்சம் பணத்தை பெற்று அரியூர் கிராம நிர்வாக அதிகாரி நாராயணன் மூலம் ஜெயகுமாரிடம் கொடுத்து 5 பேருக்கும் மோசடியாக வெற்றி பெற வைத்துள்ளனர்.  அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த கார்த்திக்(30) தனது உறவினர் பாஸ்கர் மூலம் ஜெயகுமாரிடம் ரூ.9 லட்சம் பணம் கொடுத்து 268.5 மதிப்பெண்கள் பெற்று 36வது இடம் பிடித்து சென்னை எழிலகத்தில் உள்ள  வணிக வரித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருவது தெரியவந்தது. மேலும், சித்தாண்டி பயன்படுத்திய செல்போனை சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் அந்த செல்போனில் ஆதாரங்கள் அனைத்தும்  அழிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து சிபிசிஐடி போலீசார் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் ஆய்வு செய்த போது, அதில் மோசடி தொடர்பாக உயரதிகாரிகள், முக்கிய குற்றவாளியான ஜெயகுமார் மற்றும் இடைத்தரகர்களிடம் பேசிய ஆடியோக்கள் இருந்தது  தெரியவந்தது. யார் யாரிடம் எவ்வளவு பணம் வாங்கப்பட்டது என்பது குறித்தும் தனி வாட்ஸ் அப் குழு அமைத்து திட்டத்தை செயல்படுத்தியதும் தெரியவந்தது.  அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் அதிரடியாக ஆயுதப்படை காவலர் பூபதி  மற்றும் மோசடியாக பணம் கொடுத்து தேர்வாகி எழிலகத்தில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த கார்த்திக் ஆகியோரை நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள இடைத்தரகரான  அரியூர் கிராம நிர்வாக அதிகாரி நாராயணன்(எ) சக்தியை சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : friends ,Bhupathi ,Armed Forces , TNPSC fraud, Siddhanthi, Armed Forces Guard Bhupathi, 2 arrested
× RELATED அணியின் நலனுக்காக புதிய...