×

நித்யானந்தா ஜாமீன் ரத்து நீதிபதி குன்ஹா அதிரடி உத்தரவு: கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களுரு: நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்ட  ஜாமீனை ரத்து செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல்  பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான சாமியார் நித்யானந்தாவிற்கு   வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்து உத்தரவிடும்படி லெனின் கருப்பன்  சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவரது வழக்கறிஞர் வாதிடும்போது,  ‘‘கடந்த 5.6.2018 அன்று  இறுதியாக நித்யானந்தா  இந்த வழக்கில் விசாரணைக்கு  ஆஜரானார். அதன் பிறகு இதுவரை அவர் ஆஜராகாமல் வழக்கை காலதாமதப்படுத்துகிறார்’ என குற்றம்சாட்டினார். மேலும், ‘‘2018ம் ஆண்டு அக்டோபரிலேயே அவரது பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டது.

அவர் வெளிநாட்டில் பதுங்கி  இருப்பதாகவும், இதுவரை எங்கு உள்ளார் என்ற தகவல் யாருக்கும் தெரியாமல்  இருக்கிறது’’ என்று வாதிட்ட அவர், ‘‘பாலியல் பலாத்கார வழக்கில் தீர்ப்பு  வழங்கப்பட்டால் கூட அதை எதிர்கொள்ள நித்யானந்தா  இல்லாத நிலைதான் உள்ளது.  ஆகையால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’’ என்றும் வாதிட்டார். இதைத்தொடர்ந்து, நீதிபதி குன்ஹா வெளியிட்ட உத்தரவில்,  ‘‘நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் ரத்து  செய்யப்படுகிறது’’  என்று உத்தரவிட்டார். இதையடுத்து நித்யானந்தாவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பெற்று அவரை கைது செய்ய கர்நாடக சிஐடி போலீசார் தயாராகி வருகின்றனர்.


Tags : Karnataka High Court ,Nithyananda , Nithyananda, bail revoked, Justice Kunha, Karnataka High Court
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...