×

எஸ்ஆர்எம் பல்கலையில் துப்பாக்கியுடன் பயங்கர மோதல் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி?

சென்னை: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி, பட்டா கத்தியுடன் மாணவர்கள் பயங்கரமாக மோதிக் கொண்டதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாக பெற்றோர் மற்றும் கல்வியாளர் தெரிவித்தனர். காட்டாங்கொளத்தூரில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் உள்ளது. இதன் வளாகத்தில் பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, சட்டக்கல்லூரி, செவிலியர் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்டவை செயல்படுகின்றன. இங்கு, தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை எம்பிஏ 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. கல்லூரி வளாகத்திலேயே ஒருவரை ஒருவர் பட்டா கத்தியால் தாக்கிக்கொண்டனர். அப்போது, ஒரு வாலிபர் கையில் துப்பாக்கியுடன் மற்ற மாணவர்களை சுடுவதற்காக துரத்தி சென்றுள்ளார். இதை பார்த்தது சக மாணவ, மாணவிகள் அலறியடித்துகொண்டு ஓட்டம்பிடித்தனர். இந்த சம்பவத்தால் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் பரபரப்பு நிலவியது. பட்டா கத்தியால் வெட்டியதில் 3 பேரின் தலையில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையறிந்ததும் வண்டலூர் டிஎஸ்பி ரவிச்சந்திரன், மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் செல்வம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் பல்கலைக்கழகத்துக்கு வந்து மோதல் நடந்த இடங்களை பார்வையிட்டனர். பட்டாக்கத்தி மற்றும் ஆயுதங்களை கைப்பற்றினர். முக்கிய பகுதிகளில் உள்ள கேட்டுகளை மூடி மாணவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர்களுக்கு கள்ளத்துப்பாக்கி எப்படி கிடைத்தது, இவர்களின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது பற்றி தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனிடையே நேற்று மறைமலைநகர் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகரின் மகன் லலித் என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வண்டலூர் டிஎஸ்பி ரவிச்சந்திரன் கூறுகையில் “எஸ்ஆர்எம் கல்லூரியில் படிக்கும் எம்பிஏ மாணவர்கள் இடையே கடந்த 3ம் தேதி இரு பிரிவுகளாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று மாலையும் இரு கோஷ்டியினர் மோதிக்கொண்டனர். மோதலின்போது பயன்படுத்தப்பட்டது போலி துப்பாக்கி என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள மாணவர்களை பிடித்து விசாரித்தால்தான் உண்மை நிலவரம் தெரியவரும்” என்றார்.

மாணவர்கள் மோதல் குறித்து தனிப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை தேடிவந்தனர். மறைமலை நகரை சேர்ந்த லலித்பிரசாத் (30) ஊரப்பாக்கத்தை சார்ந்தா ராஜி (25), பெருங்ககளத்தூரை சேர்ந்த மவுலா ஜி (27) உள்ளிட்ட ஐந்து மாணவர்களை பிடித்து விசாரிக்கின்றனர். கலவரத்தின் போது பயன்படுத்திய துப்பாக்கி எங்கு  உள்ளது யார் கொடுத்தது துப்பாக்கி லைசன்ஸ் பெற்றவர்களிடம் இருந்து பெறப்பட்டதா? அல்லது துப்பாக்கி கள்ள மார்க்கெட்டில் வாங்கப்பட்டதா? என்பது குறித்தும் தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். தொடர்ந்து பட்டாக்கத்தியுடனும் துப்பாக்கியுடனும் பல்கலைக்கழக வளாகத்தில் மோதல் நடப்பதாகவும் கஞ்சா விற்பனை அதிகமாக உள்ளதாலும் விடுதி மற்றும் கல்லூரிகளில் ஏதாவது ஆயுதங்கள் பதுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் பல்கலைக்கழகத்தை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

இரண்டாவது நாளாக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆளுங்கட்சி பிரமுகரின் மகன்களுடன் தொடர்புடையவர்கள் யார்? அவர்களது பின்னணி என்ன? என்பது குறித்தும் விசாரிக்கின்றனர். ராக்கிங், பட்டாகத்தி, கஞ்சா, துப்பாக்கி உள்ளிட்ட கலாசாரங்கள் கல்லூரி வளாகத்தில் மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் மத்திய பல்கலைக்கழகங்களை கண்காணிக்கும் மத்திய மாநில உயர் கல்வித்துறை மாணவர்களின் பாதுகாப்பு ஆகியவை குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்களும் பெற்றோரும் கருத்து தெரிவித்தனர்.

6 மாதமாக போலீஸ் நடத்திய விசாரணை என்ன?

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே அடிக்கடி ராக்கிங் பிரச்னை ஏற்பட்டு மோதல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. கஞ்சா விற்பதாலும். ராக்கிங் பிரச்னையாலும். நிர்வாகத்தின் டார்ச்சர் காரணமாகவும் கடந்த 6 மாதத்தில் கன்னியாகுமரி, பொன்னேரி, பீகார் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மாணவர்கள் 4 பேர் மர்மமான முறையில் இறந்துள்ளனர். இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்க, டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதன்படி சிபிசிஐடி எஸ்பி தலைமையில் கடந்த 6 மாதமாக பல்கலைக்கழக பதிவாளர், முதல்வர், பேராசிரியர், விடுதி வார்டன் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த சம்பவத்தில் அதிமுக பிரமுகர்களின் மகன்கள் சிக்குவதால் போலீசார் உண்மையை மறைப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags : conflict ,campus ,SRM University SRM , Terrorist conflict ,student gun at SRM campus questioned?
× RELATED லடாக்கின் சீன எல்லையோரத்திற்கு...