×

பயணிகளுக்கு பல்வேறு வசதிகளோடு நெல்லையில் இன்று முதல் ரெட் கலர் பஸ்கள் இயக்கம்...மார்ச் மாதத்திற்குள் 115 புதிய பஸ்களை இயக்க முடிவு

நெல்லை: நெல்லையில் இன்று முதல் ரெட் கலர் பஸ்கள் பல்வேறு வசதிகளோடு இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரில் இயக்கப்பட்ட இப்பஸ்கள் நெல்லைக்கு வந்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சென்னை பெருநகர அரசு போக்குவரத்து கழகம் ஐடி துறையில் பணியாற்றுவோரின் வசதிக்காக முதன்முதலில் ரெட் கலர் பஸ்களை இயக்கியது. இதற்கு பயணிகள் மத்தியில் கூடுதல் வரவேற்பு கிடைத்தது. பின்னர் இச்சேவையை மற்ற இடங்களுக்கும் போக்குவரத்து கழகம் விரிவாக்கம் செய்தது.
ஸ்மார்ட் சிட்டி அந்தஸ்தை பெற்றுள்ள நெல்லை மாநகரம், சென்னை மாநகருக்கு இணையாக வண்ணமிகு பஸ்களை இயக்கிட ஏற்கனவே திட்டமிட்டிருந்தது.

 அதன் ஒரு பகுதியாக பல்வேறு வசதிகளை கொண்ட ரெட் கலர் பஸ்கள் இன்று முதல் நெல்லை மாநகரில் இயக்கப்பட்டு வருகின்றன இப்பஸ்களில் 40 சீட்கள் மட்டுமே இடம் பெறும். ஆனால் பயணிகள் நிற்க, வந்து செல்ல கூடுதல் இட வசதிகள் காணப்படும்.எல்இடி ரூட் போர்டு, தானியங்கி கதவு, மியூசிக்கல் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு புதிய வசதிகள் ரெட் கலர் பஸ்சில் இடம் பெற்றுள்ளன. கரூரில் ரெட் பஸ்கள் வடிவமைக்கப்பட்டு நேற்று நெல்லை வந்து சேர்ந்தன. நெல்லைக்கு வந்துள்ள இப்பஸ்கள் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இப்பஸ்கள் தற்போது நெல்லை ரயில் நிலையத்தில் புறப்பட்டு வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் வழியாக நெல்ைல புதிய பஸ் நிலையம் செல்கின்றன. பின்னர் அங்கிருந்து நெல்லை ஹைகிரவுண்ட் பல்நோக்கு மருத்துவமனைக்கு செல்கின்றன. மொத்தம் 5 ரெட் பஸ்கள் இன்று மாநகரில் இயக்கப்பட்டு வருகின்றன.

1ம் நம்பர் ரூட் எனப்படும் நெல்லை ரயில் நிலையம் தொடங்கி, வண்ணார்பேட்டை, பாளை பஸ்நிலையம், நெல்லை சந்திப்பு புதிய பஸ் நிலையம் வரையிலான வழித்தடத்திலும் ரெட் கலர் பஸ்கள் இவ்வாரத்திற்குள்ளாக இயக்கப்பட உள்ளன. அதற்குரிய பஸ்கள் தற்போது வட்டார போக்குவரத்து கழகத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறது.நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை ஏற்கனவே 5 குளிர்சாதன வசதிகள் கொண்ட பஸ்கள் (ஏசி பஸ்கள்) இயக்கப்பட்டு வருகின்றன. நெல்லை - மதுரை, நெல்லை - தென்காசி, நெல்லை - தூத்துக்குடி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் பஸ்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

குறிப்பாக ரூ.10 முதல் 15 வரை கட்டணம் உயர்வாக காணப்பட்டாலும் பயணிகள் அப்பஸ்களின் வருகைக்காக காத்திருந்து ஏறி செல்கின்றனர். இந்நிலையில் வரும் மார்ச் மாதத்திற்குள் புதியதாக மேலும் 10 ஏசி பஸ்களை இயக்கிட உள்ளது. அதுபோக 115 புதிய பஸ்களும் நெல்லை அரசு போக்குவரத்து கழகத்திற்கு கிடைக்க உள்ளன. பாடாதி பஸ்களை பார்த்து பழகிவிட்ட நெல்லை மக்களுக்கு, புதிய பஸ்களின் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

கட்டணம் எவ்வளவு?

நெல்லை மாநகரில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரெட் கலர் பஸ்களில் நெல்லை ரயில் நிலையம் முதல் புதிய பஸ் நிலையம் செல்ல கட்டணம் ரூ.15 ஆகும். ஏற்கனவே பழைய பஸ்களில் ரூ.12 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.



Tags : travelers ,facilities ,Nellayi ,Nellai , Red Color buses in Nellai: Decision to operate 115 new buses by March
× RELATED கிளாம்பாக்கத்தில் அனைத்து வசதிகளும்...