×

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் 8ம் தேதி தைப்பூச திருவிழா: பக்தர்கள் குவிகின்றனர்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் 8ம் தேதி நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருகிற 8ம் தேதி தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்கள் ஏராளமானோர், பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி ரோடுகளில் பச்சை வேட்டி அணிந்த பக்தர்கள் சாரை சாரையாக செல்வதை காண முடிகிறது. சிலர் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வருகின்றனர்.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 8ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு அபிஷேக ஆராதனை, 6.30 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை, 8.30 மணிக்கு அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் நிகழ்ச்சி, அதைத்தொடர்ந்து பூஜைகளும் நடக்கிறது. உச்சிகால பூஜைக்குப்பின் சுவாமி அலைவாயுகந்த பெருமாள் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு வருகிறார்.

அங்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி 4 ரதவீதி, உள்மாடவீதியை சுற்றி இரவு கோயிலை வந்தடைகிறார். இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தைப்பூச திருவிழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Devotees ,Thiruchendur Murugan Temple ,8th Devotees , Devotees gather at Thiruchendur Murugan Temple on 8th
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...