காலிங்கராயன் வாய்க்காலில் ஆகாய தாமரையால் நீரோட்டம் பாதிப்பு: அகற்ற விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையில் இருந்து வரும் பவானி ஆற்றுநீரானது காலிங்கராயன் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து கொடுமுடி ஆவுடையார்பாறை வரை 56.5 மைல் தூரத்திற்கு பாய்ந்து செல்கிறது. இந்த வாய்க்கால் மூலமாக 15 ஆயிரத்து 743 ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது. வாய்க்காலில் சாயநீர், தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் மற்றும் வீடுகள், குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவுநீர் ஆகியவை கலப்பதை முற்றிலும் தடுக்கும் வகையில் காலிங்கராயன் வாய்க்காலில் கான்கிரீட் தடுப்புசுவர் அமைக்கப்பட்டுள்ளது. காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வைராபாளையம் வரை கான்கிரீட் தடுப்புசுவர் அமைக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் செல்வதற்காக பேபி கால்வாய் அமைத்துள்ளனர். இதனால் கடைமடைக்கு தண்ணீர் வேகமாக செல்கிறது.

ஆனால், கான்கிரீட் தடுப்புசுவர் அமைக்காத பகுதிகளில் ஆங்காங்கே ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளதால் நீரோட்டம் தடைபட்டு வருகிறது. கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் பரவியுள்ள ஆகாய தாமரைகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘ஆகாய தாமரைகளை முழுமையாக அழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. தற்போது பாசனத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும். மீதமுள்ள பகுதிகளிலும் கான்கிரீட் தடுப்புசுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories:

>