×

செங்கோட்டை அருகே 100 ஆண்டு பழமையான ஆலமரம் சாய்ந்தது: ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

செங்கோட்டை: செங்கோட்டையில் 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் வேரோடு சாய்ந்ததால் கொல்லம் - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செங்கோட்டை புளியரை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால், முட்டை, சிமென்ட் உள்ளிட்டவைகள் கொண்டு செல்லப்படுகிறது. இதுபோல கேரள மக்களும் இங்கு வந்து உணவு, காய்கறி, மளிகை பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர். இதனால் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை எப்பொழுதும் வாகன நெருக்கடி இருந்து கொண்டேயிருக்கும்.

இந்நிலையில் நேற்று நண்பகல் 2 மணிக்கு செங்கோட்டையில் உள்ள தனியார் டெக்ஸ்டைல்ஸ் மில் அருகே சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து நெடுஞ்சாலையில் விழுந்தது. அப்போது அங்கு யாரும் இல்லாததால் சேதம் ஏற்படவில்லை. எனினும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்கள், கேரளாவில் இருந்து திரும்பி வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையின் இருபுறமும் அணிவகுத்து  நின்றன. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவலறிந்த தீயணைப்பு துறையினர், இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பொதுமக்கள் உதவியுடன் வெட்டி அகற்றினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது.

Tags : banyan tree slope ,Sengottai ,tree slopes , Senkottai, the oldest banyan tree, traffic impact
× RELATED பறவை காய்ச்சல் எதிரொலி தமிழக-கேரள...