லக்னோ: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சன்னி வக்பு வாரியத்துக்கு உத்தரப்பிரதேச அரசு 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விவகாரம் நீண்ட காலமாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் கடந்த நவம்பர் மாதம் 9ம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக ஒதுக்க வேண்டும். அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். இதற்காக புதிய அறக்கட்டளை ஒன்றை 3 மாதத்தில் மத்திய அரசு அமைக்க வேண்டும். அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதுமட்டுமல்லாது, மசூதி கட்ட சன்னி வக்பு வாரியத்துக்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த 3 மாத கெடு வருகின்ற பிப்ரவரி 9ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், சன்னி வக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலத்தை உத்தரப்பிரதேச அரசு ஒதுக்கியுள்ளது. லக்னோ நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள தன்னிபுர் கிராமத்தில் இந்த 5 ஏக்கர் நிலம் உள்ளது. அயோத்தியில் இருந்து 18 கி.மீ தொலைவில் இந்த கிராமம் உள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், நிலம் ஒதுக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அரசு செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் ஷர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்குவதற்காக 3 வெவ்வேறு நிலங்கள் குறித்த தகவல் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அதில், தன்னிபுர் கிராமத்தில் உள்ள நிலத்தை மத்திய அரசு தேர்வு செய்த நிலையில், மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இப்பகுதிக்கு செல்ல நல்ல போக்குவரத்து வசதி உள்ளது, வகுப்புவாத நட்பு மற்றும் சட்டம் ஒழுங்கு கூட இங்கு நன்றாக உள்ளது, என ஷர்மா தெரிவித்துள்ளார். முன்னதாக, ராமர் கோயில் கட்ட அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றக் கூட்டத்தில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.