×

பரமத்திவேலூர் ஸ்டூடியோ கம்ப்யூட்டரில் போட்டோ, வீடியோக்களை முடக்கி மிரட்டும் சைபர் கிரைம் கும்பல்: 1000 டாலர் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியதால் அதிர்ச்சி

பரமத்திவேலூர்: பரமத்திவேலூர் போட்டோ ஸ்டூடியோவில் கம்ப்யூட்டரில் உள்ள வீடியோ, போட்டோக்களை  முடக்கிய சைபர் கிரைம் கும்பல் அதனை திரும்ப கொடுக்க ஆயிரம் டாலர்கள் கேட்டு அனுப்பிய குறுஞ்செய்தியால் ஸ்டூடியோ உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்துள்ள நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் கடந்த 30 ஆண்டுகளாக போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். இவர் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வீடியோ, போட்டோ எடுத்து அதை எடிட்டிங் செய்து ஆல்பம் மற்றும் வீடியோ கேசட்டுகளாக தயார் செய்து கொடுத்து வருகிறார். இவர் தனது கம்ப்யூட்டரில் 10க்கும் மேற்பட்ட திருமண வீடியோ மற்றும் போட்டோக்கள் வைத்து அதற்கான எடிட்டிங் வேலைகளை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவரது கம்ப்யூட்டர் செயலிழந்தது. கம்ப்யூட்டரில் இருந்த வீடியோ மற்றும் போட்டோக்களை திறக்க முடியவில்லை. அப்போது கம்ப்யூட்டர் ஸ்கிரீனில், இந்த கம்ப்யூட்டரில் உள்ள போட்டோ, வீடியோக்களை திறக்க முடியாது. அவற்றை திறக்க வேண்டுமென்றால் தங்கள் வங்கிக்கணக்கில் ஆயிரம் டாலர்களை டெபாசிட் செய்ய வேண்டும் என குறுஞ்செய்தி வந்திருந்தது. இதனை பார்த்த சண்முகம் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பரமத்தி போலீசில் புகாரளித்தபோது, அங்கிருந்த போலீசார் நாமக்கல் சைபர் கிரைம் போலீசில் புகாரளிக்க கூறினர்.  

இச்சம்பவத்தால் பரமத்திவேலூர் பகுதியில் போட்டோ ஸ்டூடியோ கடை  உரிமையாளர்கள் அச்சமடைந்துள்ளனர். சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடும் மர்ம நபர்கள் போட்டோ, வீடியோ தொழில் செய்பவர்களை குறிவைத்து, அவர்களின் கம்ப்யூட்டரில் உள்ள படங்களை திருடி கணிசமான தொகையை பெறுவதையே தொழிலாக செய்து வருகின்றனர். இதுபோன்ற சைபர் கிரைம் குற்ற சம்பவங்களை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Cybercrime gang ,paramedics ,studio ,Paramatthivalur , Paramathivelur, Studio, Photo, Video, Cybercrime, SMS
× RELATED 2 கோடி பார்வைகளை தொட்ட கங்குவா