×

திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தரிசனம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா நேற்று கோலாகல கொண்டாட்டத்துடன் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். முருகப்பெருமானின் முதல்படை வீடு என்ற பெருமைக்குரிய மதுரை, திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தெப்பத்திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான தெப்பத்திருவிழா கடந்த ஜன.26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை வேளைகளில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் மயில் வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம், புஷ்ப வாகனம், ரிஷப வாகனம், ரத்தின சிம்மாசனம், பச்சை குதிரை உள்ளிட்ட வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

நேற்று முன்தினம் நடந்த தேரோட்டத்தில் சிறிய வைர தேரில் சுவாமி எழுந்தருளினார். ‘அரோகரா’ கோஷங்கள் முழங்க, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 11 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் தெப்பத்திற்கு எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தெப்பத்தில் மிதந்த தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை 6.30 மணிக்கு மின்னொளியில் மீண்டும் சுவாமி தெப்பத்தை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் (பொ) மு.ராமசாமி மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags : darshan ,Thiruparankundram Theppathiru Festival ,Pilgrims , Thiruparankundram, Theppattu Festival, Devotees, Vadam, Darshan
× RELATED தர்ஷன், அஞ்சு குரியன் நடித்த எண்ட ஓமனே