×

தனி பஸ் நிலையம் அமைத்த பிறகும் நெல்லையில் ‘டிமிக்கி’ கொடுக்கும் ஆம்னி பஸ்கள்: கூடுதல் வசதிகள் செய்யப்படுமா?

நெல்லை: நெல்லை மாநகரில் அதிகரித்துள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய பஸ் நிலையம் அருகே கட்டப்பட்ட நெல்லை மாநகராட்சி பஸ் நிலையத்திற்குள் குறைந்த அளவிலான பஸ்களே வருகின்றன. எனவே இங்கு அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் முழுமையாக இடிக்கப்பட்டு ரூ.79 ேகாடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்தப் பணி மந்த கதியில் நடக்கிறது. இதன் காரணமாக பொருட்காட்சி மைதானத்தில் தற்காலிக பஸ் நிலையம் செயல்படுகிறது. இதனால் நெல்லை சந்திப்பு பழைய பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஆம்னி பஸ்கள் வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் செல்லப்பாண்டியன் மேம்பாலத்தில் வடக்கு முனையில் இருந்து புறப்பட்டன.

இந்தப்பகுதியில் தாழையூத்து, தச்சநல்லூர் மார்க்கமாக செல்லும் டவுன் பஸ்களும் புறப்பட்டு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வேய்ந்தான்குளம் புதிய பஸ்நிலையம் அருகே நெல்லை மாநகராட்சி சார்பில் ஆம்னி பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இதற்கு ஆரம்பத்தில் சில எதிர்ப்புகள் வந்தாலும் மாநகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து இந்த ஆம்னி பஸ் நிலையத்தில் காம்பவுன்ட், தார்தளம், பயணிகள் காத்திருப்பு அறை, கழிப்பறை போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  
இந்த ஆம்னி பஸ் நிலையம் அமைக்கப்பட்ட பின்னர் அனைத்து ஆம்னி பஸ்களும் வந்து செல்லும் இடமாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தப்படி ஆம்னி பஸ்கள் இந்த பஸ் நிலையத்திற்குள் வருவதில்லை.

நெல்லை மட்டுமின்றி குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான ஆம்னி பஸ்கள் நெல்லையை கடந்து சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பயணிக்கின்றன. இந்த புதிய ஆம்னி பஸ் நிலையத்தில் நாள்தோறும் ஒரு சில பஸ்களே, அதுவும் ஒரு சில குறிப்பிட்ட ஆம்னி பஸ் நிறுவன பஸ்கள் மட்டும் வந்து செல்வதாக கூறப்படுகிறது. இதற்குள் வந்து செல்ல மாநகராட்சிக்கு குறிப்பிட்ட தொகையை தினமும் கட்டணமாக செலுத்தவேண்டும் என்பதால் இதற்கு டிமிக்கி கொடுப்பதற்காக ஆம்னி பஸ்கள் மாற்றுப் பாதையில் செல்வதாக கூறப்படுகிறது. இந்த பஸ் நிலையத்தில் உணவகம் போன்ற வசதிகள் இல்லை. கூடுதல் கழிப்பறை வசதி இல்லை. போலீஸ் பூத் இருந்தாலும் அங்கு காவலர்களை காணமுடிவதில்லை என்பது போன்ற காரணங்களும் கூறப்படுகின்றன.

அனைத்து ஆம்னி பஸ்களும் இங்கு வரமறுப்பதால் அந்த பஸ்களுக்கு புக் செய்த பயணிகள் தங்கள் பஸ் வரும் இடம் தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆம்னி பஸ் நிலையத்திற்குள் வராவிட்டாலும் பெரும்பாலான ஆம்னி பஸ்கள் இப்போதும் வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் நின்று செல்கின்றன. சில நேரங்களில் முன்பதிவு பயணிகளை குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து பஸ்சில் ஏற்றிச் செல்கின்றனர். இந்த குளறுபடிகள் மாறுவதற்கு மாநகராட்சி ஆம்னி பஸ் நிலையத்தில் அனைத்து பஸ்களும் வந்து செல்ல உணவகம் மற்றும் கூடுதல் காத்திருப்பு அறை,  கழிப்பறை, இலவச ‘ஒய்பை’ உள்ளிட்ட வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கவேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Omni ,bus station ,facilities , Bus Station, Paddy, Omni buses
× RELATED கோவையில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ் பறிமுதல்