×

புறவழிச்சாலையை தவிர்த்து அரவக்குறிச்சி நகரில் நுழையும் லாரிகளால் நெரிசல்: போக்குவரத்து கடும் பாதிப்பு

அரவக்குறிச்சி: புறவழிச் சாலை இருந்தும் அரவக்குறிச்சி நகர பகுதியில் நுழையும் லாரிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், இதனால் ஏற்படும் விபத்துகளை தடுக்கவும் லாரிகளை புறவழிச்சாலையில் சென்றுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டார தலைநகராகும். இங்கிருந்து சென்னை, நாகூர், ராயவேலூர், கரூர், திண்டுக்கல், பழனி, தாராபுரம், கோவை, திருச்சி மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு தினசரி சுமார் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்நிலையில், அரவக்குறிச்சி நகர பகுதியில் மணல் லாரிகள் மற்றும் சரக்கு லாரிகளின் போக்குவரத்து அதிகமாக இருந்து வருகிறது. இதனால் லாரிகள், பேருந்துகள் என அனைத்து வாகனங்களும் நகருக்குள் வந்து செல்லவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

குறிப்பாக பேருந்து நிலையத்திலிருந்து ஏவிஎம் கார்னர் பகுதி சாலை மிகவும் குறுகளாக உள்ளது. இதில் லாரிகள் அதிகளவில் நுழைவதால், பேருந்து நிலையம் மற்றும் கடைவீதி உள்ளிட்ட இடங்களுக்கு நடந்து செல்லும் பொதுமக்கள் வேகமாக வரும் லாரிகள் மோதி விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு நடந்து செல்கின்றனர். விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அச்சமும் ஏற்படுகிறது. குறிப்பாக பள்ளி கல்லூரி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் பள்ளி கல்லூரி வாகனங்களும் சேர்ந்து கொள்ளுவதால் இன்னும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. அரவக்குறிச்சி நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படும் அச்சம் ஏற்பட்டு வருகிறது. எனவே அரவக்குறிச்சி நகருக்குள் வந்து செல்லும் லாரிகள் அனைத்தும் புறவழிச்சாலை சென்று வர போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்ய வேண்டும்.

வடக்கே கரடிபட்டியிலிருந்தும், தெற்கே ஈஸ்வரன் கோவில் எதிரில் புறவழிச்சாலைக்கு வழி இருந்தும் நகருக்குள் வரும் லாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக முக்கியமான பிரிவு சாலைகளில் லாரிகள் நகர பகுதியில் செல்லக்கூடாது என எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். அங்கு போக்குவரத்து காவலரை பணியமர்த்த வெண்டும். அரவக்குறிச்சி நகருக்குள் நுழையும் லாரிகளால் பெரும் விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Aravakurichi ,town ,Aravacurichi , Arawakurichi, lorry, jam
× RELATED கரூர் மாவட்டத்தில் வரத்து அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி