×

மறுத்த மாநகராட்சி மீண்டும் மனது வைக்குமா?... மதுரையை ரசிக்க வானில் பறந்தபடி ராட்சத ஏர் பலூன் சுற்றுலா திட்டம்; ‘குட்டி விமான’ திட்டத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக ஏற்படுத்த கோரிக்கை

மதுரை: மதுரை மாநகராட்சியானது வானில் பறந்தபடி மீனாட்சி கோயில் உள்ளிட்ட நகரை ரசிக்கும் விதத்தில் ‘ராட்சத ஏர் பலூன்’ சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இத்திட்டத்தை மாநகராட்சி மறுத்துள்ள நிலையில், ஏற்கனவே மதுரையில் இருந்து காணாமல் போன ‘குட்டி விமான’ திட்டத்திற்கு மாற்றாக இதுபோன்ற சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை தொன்மை சிறப்புடன், ஆன்மிக மேன்மை கொண்ட அற்புத நகரம். உலகப்புகழ் பெற்ற மீனாட்சியம்மன் கோயில், அதை சுற்றிய நகரத்து வீதிகள், வைகையாறு என ஒவ்வொன்றும் அழகானவை. மதுரையை வானில் இருந்து ரசிப்பது சிறப்பு அனுபவமாக இருக்கும். இதற்காக ‘ராட்சத ஏர் பலூன்’ திட்டத்தை மாநகராட்சி நடைமுறைப்படுத்த இருப்பதாக செய்திகள் வெளியாகின.

மீனாட்சி கோயில் அருகே பலூன் பறக்கவிடும் தளம் அமைத்து, இங்கிருந்து ஒன்றிரண்டு பலூன்களை முதல்கட்டமாக வானில் பறக்கவிட இருப்பதாகவும், ஒரு பலூனுக்கு அதிகபட்சம் 50 பேர் பயணிக்கலாம் என்றும், இதற்கு கட்டணமும் நிர்ணயிக்கப்படும் என்றும், இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘மீனாட்சி கோயில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, இதுபோன்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தும் எண்ணம் இல்லை. இது ஆலோசிக்கப்பட்டு, கைவிடப்பட்ட திட்டம்’ என்றார். இதுகுறித்து மதுரை சுற்றுலா ஆர்வலர்கள் கூறும்போது, ‘மதுரையில் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களில் அரசு கூடுதல் கவனம் காட்ட வேண்டும்.

கம்போடியாவில் உள்ள ‘அங்கோர்வாட்’ கோயிலை வானிலிருந்து கண்டு ரசிக்கும் வகையில் ‘ராட்சத ஏர் பலூன் சுற்றுலா திட்டம்’ இருக்கிறது. இவ்வகையில் மதுரையிலும் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் வானில் பறந்தபடியே நகரை பார்த்து ரசிக்கும் ‘குட்டி விமானம்’ திட்டம் இதே மதுரையில் ஏற்கனவே நடைமுறையில் இருந்தது. அதாவது, மதுரையில் இரண்டாம் உலகப்போரின் போது 1942ல் ராயல் ஏர்போர்ஸ் எனும் பிரிட்டீஷ் விமானப்படையினரே முதல் விமானத்தளத்தை அமைத்து, 1948 வரை பயன்படுத்தினர். பிறகு இத்தளம் இந்திய அரசிடம் ஒப்படைத்து, பயன்பாடின்றி இருந்தது. இங்கு விமான போக்குவரத்து 1956ல் துவங்கி, இப்போது வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து விமானங்கள் இயக்கப்படுகிறது. ஒரு காலத்தில் மதுரை சித்திரை திருவிழா நாட்களில் இந்த விமான நிலையத்திலிருந்து ‘குட்டி சுற்றுலா விமானம்’ இயக்கப்பட்டது. இதில் ஏறி வலம் வந்து மதுரையை ரசித்து திரும்பலாம். அப்போது ரூ.5 கட்டணம் பெறப்பட்டது.

யானைமலை, நாகமலை இடையே ஒரு பாதுகாத்த, தாமரை இலைகளாய் அடுக்கடுக்கான தெருக்களும், உயர்ந்த கோபுரங்களுமான மதுரை நகரம் பறவை பார்வையில் மக்களுக்கு அழகூட்டியது. பின்னாட்களில் நிறுத்தப்பட்ட, இந்த பழமை பயணம் மீட்கப்படாமல் அப்படியே போய் விட்டது. இந்நிலையில் தற்போது ‘ஏர் பலூன் திட்டம்’ மூலம் மாநகராட்சி, இந்த பழமை பயணத்தை மீட்டெடுக்க வேண்டும். மதுரை மக்களுடன், இங்கு சுற்றுலா வருவோர் மனங்களிலும் இது நிச்சயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்’ என்றனர்.

Tags : Madurai, Giant Air Balloon Tour Project
× RELATED உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா...