×

தலமலை வனச்சாலையில் நடமாடும் ஒற்றை யானை: வன கிராம மக்கள் அச்சம்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான்,  கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. புலிகள் காப்பகங்களில் உள்ள வனச்சாலைகளில் தற்போது பகல் நேரங்களில் யானகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தலமலை வனப்பகுதியில் அமைந்துள்ள  திம்பம்- தலமலை வனச்சாலையில் யானைகள் பகல் நேரங்களில் உலா வருகின்றன. இவ்வனப்பகுதியில் அமைந்துள்ள காளிதிம்பம், மாவநத்தம், பெஜலட்டி, இட்டரை, தடசலட்டி, ராமரணை உள்ளிட்ட வன கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இச்சாலையில் பயணிக்கின்றனர்.

ராமரணை பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் ஒற்றை யானை நடமாடுவதோடு வாகனங்களை வழிமறிப்பதால் வன கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை ராமரணை வனப்பகுதியில் சாலையோரம் ஒற்றை காட்டு யானை வெகுநேரம் சுற்றித்திரிந்தது. இதைக்கண்ட வாகன  ஓட்டிகள் அப்பகுதியில் சாலையை கடக்க முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகினர். சுமார் 1 மணி நேரம் யானை அப்பகுதியில் முகாமிட்டது. பின்னர் மெதுவாக சாலையை  கடந்து சென்றது. இதன்பின் வாகன ஓட்டிகள் சென்றனர். இலையுதிர் காலம்  தொடங்குவதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி சாலைகளில் சுற்றித்திரிய வாய்ப்புள்ளதால் சாலையில் செல்வோர் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags : Head hill, forest road, elephant, forest villagers
× RELATED கோவை மாநகராட்சியை விபத்தில்லா...