×

சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

ஈரோடு: அந்தியூர் அருகே சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அந்தியூர்: ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர்  சின்னதங்கம் என்ற ராதாகிருஷ்ணன்(49). அ.தி.மு.க. பிரமுகரான இவர், அந்தியூர் அருகே உள்ள மூலக்கடை என்ற இடத்தில் நேற்று காலை காரில் வந்த மர்ம நபர்களால் நடுரோட்டில் ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதற்கிடையே, கொலையாளிகள் வந்த காரை கவுந்தப்பாடி போலீசார் சலங்கபாளையம் பகுதியில் துரத்தி சென்று பிடித்தனர். காரில் இருந்த சென்னை, பல்லாவரத்தில் வசித்துவரும் மதுரை மாவட்டம், ஈ.பி. காலனியை சேர்ந்த சரவணன் (25), பல்லாவரத்தை சேர்ந்த மூர்த்தி மகன் பாலமுருகன்(30), ராஜேஷ்(26), மதுரை கரிமேடு, அழகர் வீதியைச் சேர்ந்த சிவா(24), அதே பகுதியை சேர்ந்த முத்துமாரி(25) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் கூலிப்படையினர் என்பது தெரியவந்தது. விசாரணையில், ஊஞ்சக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனுக்கும், அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவருக்கும் ரியல் எஸ்டேட் தொழிலில் முன்விரோதம் இருந்தது. இதன் காரணமாக கடந்த 2013ம் ஆண்டு சேகர் அடித்துக்கொல்லப்பட்டார். இதில், முக்கிய குற்றவாளியாக ராதாகிருஷ்ணன் இருந்தார். இதனால், சேகரின் மகன் அரவிந்த் தனது தந்தையை கொன்ற ராதாகிருஷ்ணனை பழிக்குப்பழி வாங்க 7 ஆண்டுகளுக்குப் பிறகு கூலிப்படையை ஏவி இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 5 பேரையும் பவானி குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜ்படுத்தினர். அப்போது, குற்றவாளிகள் 5 பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, கூலிப்படையை ஏவிய சேகரின் மகன் அரவிந்தன் மற்றும் கொலை சம்பவம் நடந்த இடத்தில் அடையாளம் காட்டிய நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : Radhakrishnan ,Sankarapalayam , Anthiyur, Sankarapalayam, panchayat leader, Radhakrishnan, murder
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...