×

ஏம்பல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு உணவுடன் கூடிய மாலை நேர சிறப்பு வகுப்பு துவக்கம்: பொதுமக்களிடம் வரவேற்பு

திருமயம்: ஏம்பல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உணவுடன் கூடிய மாலைநேர சிறப்பு வகுப்பு நடந்து வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஏம்பல் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், தன்னார்வலர்கள், பிடிஏ தலைவர் உள்ளிட்டோர் ஏம்பல் அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் அரசு பொது தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சியை அதிகப்படுத்துவது என முடிவு செய்தனர். இதன் அடிப்படையில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி துவங்கும் முன்னரும், முடிந்த பின்னரும் உணவுடன் கூடிய சிறப்பு வகுப்புகள் நடத்துவது என தீர்மானித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், அதிகாரிகளிடம் அனுமதி கேட்டனர். பள்ளி மாணவர்களின் நலனை மேம்படுத்த எந்த ஒரு உதவிக்கும் தடையில்லை என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த ஒரு வாரமாக மாணவர்களுக்கு உணவுடன் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இது மாணவர்கள் பள்ளியில் அதிக நேரம் இருக்க உதவுவதோடு சில வாரங்களில் வரவுள்ள அரசு பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவரையும் மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags : Commencement ,public ,Embal Government Secondary School ,Evening Special Class: Welcome to the Public , Embal Government Higher Secondary School, Evening Special Class
× RELATED பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பதை...