சத்திரம் பஸ் நிலைய பணிகள் 2021 பிப்ரவரியில் முடிவடையும்: கலெக்டர் சிவராசு பேட்டி

திருச்சி: திருச்சி சத்திரம் பஸ் நிலைய கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடையும் என கலெக்டர் சிவராசு தெரிவித்தார். திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டது. இங்கு 20 பஸ்கள் நிற்கும் அளவுக்கு பஸ் நிலையம் நெருக்கடியான பகுதியில் செயல்பட்டு வந்தது. தற்போது, நகரின் வளர்ச்சி மற்றும் பெருகி வரும் மக்கள் தொகையால் சத்திரம் பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.17.34 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நவீன மயமாக்கப்படுகிறது. இதற்காக பஸ் நிலையத்தில் இருந்த பழைய கட்டமைப்புகள் அகற்றப்பட்டு தற்போது கான்கிரீட் அமைக்கும் பணி நடக்கிறது. மொத்தம் 248 பைல் அமைக்கும் பணியில் 218 பைல் முடிவடைந்து பைல் கேப் பணி நடந்து வருகிறது. சுமார் 15 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.

புதிய சத்திரம் பஸ் நிலையத்தில் 370 ச.மீ., பேஸ்மெண்ட் தளம், 3,864 ச.மீட்டரில் தரைத்தளம், 687 ச.மீட்டரில் முதல் தளம் என அமைக்கப்படுகிறது. இந்த புதிய பஸ் நிலையத்தில் டெர்மினல் 1ல் 15 நிறுத்தங்களும், டெர்மினல் 2ல் 15 நிறுத்தங்களும் என மொத்தம் 30 நிறுத்தங்கள் அமைக்கப்படுகின்றன. தரைத்தளத்தில் 11 கடைகளும், முதல் தளத்தில் 22 கடைகளும் என மொத்தம் 33 கடைகள் அமைக்கப்படுகின்றன. கூடுதல் வசதிகளாக பயணிகள் ஓய்வறை, பயணிகள் நடைபாதை, பயணச்சீட்டுகள் விற்குமிடம், முழு விளக்கு வசதி, பாதுகாப்பான குடிநீர் வசதி, பொருட்கள் பாதுகாக்கும் அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, ஆண்கள், பெண்கள் கழிவறை மற்றும் உணவகமும் அமைக்கப்படுகின்றன. அனைத்து பணிகளும் பிப்ரவரி 20121ல் முடிக்கப்படும்.

சத்திரம் பஸ் நிலைய கட்டுமான பணிகளை கலெக்டர் சிவராசு, மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின் கலெக்டர் சிவராசு அளித்த பேட்டி: ரூ.17.34 கோடியில் சத்திரம் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. 24 மாதத்தில் பணிகள் முடியும் என டெண்டரில் கூறப்பட்டிருந்தாலும் 2021ல் பிப்ரவரியில் பணிகள் முடிந்துவிடும். பணிகளை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் இல்லாத வகையில் வாகனங்கள் நிறுத்தும் இடங்களும், சர்வதேச அளவில் பாதசாரிகளுக்கான நடைபாதையும் அமைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: