×

அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தை வட இந்தியாவுக்கு மாற்றுவது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது : நாடாளுமன்றத்தில் வைகோ பேச்சு

சென்னை:மாநிலங்களவையில் நேற்று நடந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியம், 2003ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் நாள், சென்னையில் நிறுவப்பட்டது. 2001ம் ஆண்டு நடந்த தோஹா மாநாட்டில் திறமையாக வாதாடி, காப்பு உரிமைச் சட்டங்கள் குறித்த பாதுகாப்பை ஏற்படுத்தித் தந்த, தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் முயற்சியால், அந்த வாரியம் அமைந்தது. 1999 வணிக உரிமைக் குறிகள் சட்டத்தின்படியும், 1999 புவிசார் குறியீடு, வணிகப்பொருட்கள் பதிவு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின்படியும் பதிவாளர் எடுக்கிற முடிவுகள் குறித்த மேல்முறையீடுகள் மீது, கடந்த 16 ஆண்டுகளாக, தீர்ப்பு வழங்கி வருகிறது. சென்னையை தலைமை இடமாகக் கொண்ட இந்த வாரியத்தின் சுற்று அமர்வுகள், மும்பை, புதுடெல்லி, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன.

மத்திய அரசு, இந்த வாரியத்தின் தலைமையகத்தை, சென்னையில் இருந்து மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறது. இதற்கான விருப்பத்தை, இந்திய அரசு வக்கீல் கே.கே.வேணுகோபால், தலைமை நீதிபதி இடம்பெற்றுள்ள உச்ச நீதிமன்ற அமர்வில் தெரிவித்துள்ளார். இந்த வாரியத்தை, வட இந்தியாவிற்கு மாற்றுவது குறித்து, தொடர்புடைய துறைகளிடம் கருத்துக் கேட்பதற்காக, காலக்கெடு நீட்டிப்பு கேட்டு இருக்கிறார்.
தற்போது இந்த வாரியத்திடம், 2,800 வணிக உரிமைக் குறிகள் தொடர்பான வழக்குகளும், 600 காப்பு உரிமை வழக்குகளும் முறையீடு செய்யப்பட்டுள்ளன. அமைவிடத்தால் அல்ல, மாறாக, வாரியத்தின் தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர்களைத் தேர்வு செய்வதில் ஏற்பட்ட காலதாமதத்தால் மட்டுமே வழக்குகள் தேங்கி இருக்கின்றன. எனவே, வழக்கு தொடுத்தவர்களுடைய வசதிகளைக் கருதி, நாடு முழுமையும் பரவலாக புதிய கிளைகளை அமைக்க, மத்திய அரசு முன்வர வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் நிறுவிட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்ற நிலையில், சென்னையில் இருக்கிற அறிவுசார் சொத்து உரிமை மேல் முறையீட்டு வாரியத்தை, வட இந்தியாவுக்கு மாற்ற முயற்சிப்பது, இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது.


Tags : Parliament ,Intellectual Property Appeal Board ,North India Against National Integration: Vaiko Speech ,speech ,National Unity: Vaiko ,North India , Transition of Intellectual Property, Appeal Board , North India , national unity, Vaiko speech in Parliament
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்...