×

குடியுரிமை திருத்த சட்டத்தை மக்கள் மன்றத்தில் எடுத்துச் சொல்லி மத்திய, மாநில ஆட்சியாளர்களின் முகத்திரையை கிழித்தெறிவோம்

* திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
 
சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவும், என்.ஆர்.சி.க்கு வழி கோலும் என்.பி.ஆர். தயாரிப்பதை நிறுத்தக் கோரியும்” கடந்த 24ம் தேதி எனது தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்,  தமிழகம் முழுவதும் பிப்ரவரி 2 முதல் 8ம் தேதி வரை மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
நான் முதன் முதலில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இந்த “கையெழுத்து இயக்கத்தைத்  துவக்கி வைத்தேன். என்னுடைய சட்டமன்றத் தொகுதியில் நானே சென்று மக்களைச் சந்தித்து- அவர்களிடம் இந்தக் கையெழுத்து இயக்கம் பற்றி எடுத்துச் சொல்லி-கையெழுத்துப் பெற்றேன். அதைப் போலவே அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆங்காங்கே தொடங்கி வைத்து-தமிழகம் முழுவதும் இந்தக் கையெழுத்து இயக்கம் தீவிரமாக நடைபெறுகிறது.

இன்று(நேற்று) வழக்கம் போல் காலையில் “முரசொலி” அலுவலகம் செல்லும் வழியில், தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலைப் பகுதியில், நம் திமுக தொண்டர்கள் கையெழுத்து இயக்கம் நடத்திக் கொண்டிருந்ததைப் பார்த்த நான்- காரிலிருந்து இறங்கிச் சென்று, தொண்டர்களோடு  நானும் ஒரு தொண்டன் என்ற முறையில்  இணைந்து கலந்து கொண்டு கையெழுத்துக்களைப் பெற்றேன். அப்போது ஏன் இந்தக் கையெழுத்து என்பதை மக்களிடம் விளக்கி-கையெழுத்துப் போட இயலாதவர்களிடம் கைரேகை இடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து- இந்தக் கையெழுத்து இயக்கம்,  மகத்தான மக்கள் இயக்கமாக நடைபெற வேண்டும் என்ற ஆர்வத்தை தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டு, அங்கிருந்து நான் முரசொலி அலுவலகத்திற்குப் புறப்பட்டுச் சென்றேன்.

பாஜக-அதிமுகவின் துரோகத்தை தமிழக மக்களுக்கு உணர வைத்து-இந்தக்  குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவும், என்.ஆர்.சி.க்கு வழிகோலும் என்.பி.ஆர். தயாரிப்பதை நிறுத்தி வைக்கவும் திமுக தொண்டர்கள் பெறும் ஒவ்வொரு கையெழுத்தும் உறுதிமிக்க ஒரு தூணாக நிற்கும்.
அந்த வகையில் தொடர்ந்து பிப்ரவரி 8ம் தேதி வரை கையெழுத்து இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி- பிப்ரவரி 9 அல்லது 10ம் தேதிக்குள் அனைத்து கையெழுத்துப் படிவங்களையும் தலைமைக் கழகத்திற்கு அனுப்பிட வேண்டும். அந்த ஒரு கோடி கையெழுத்துக்களையும் எடுத்துக் கொண்டு- டெல்லி சென்று- திமுகவின் தலைமையிலான அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், குடியரசுத் தலைவரை சந்தித்து,  இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துவார்கள்.

கடந்த இரு நாட்களாக இருந்த சுறுசுறுப்பைக் காட்டிலும்,  அதிக ஆர்வத்துடன் நடத்தி,  ஆணவ பா.ஜ.க. ஆட்சி மற்றும் மாநிலத்தில் உள்ள அராஜக அதிமுக ஆட்சி ஆகியவற்றின் முகமூடியை மக்கள் மத்தியில் கிழித்தெறியும் வகையில் திமுக தொண்டர்கள் முனைப்புடன்-முழு வீச்சில் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் தேசிய கீதம் புறக்கணிப்பு

திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய மு.க.ஸ்டாலின் நேற்று முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு: இன்று (4.2.2020) இலங்கை சுதந்திர தினத்தில், வழக்கமாக இசைக்கப்பட்டு வந்த முறையின்படி, தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் “இலங்கை சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் தமிழில் பாடப்படாததற்கு இலங்கைத் தூதரை உடனடியாக அழைத்து, கண்டனம் தெரிவிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக் கொள்கிறேன்.

Tags : House of Commons ,rulers ,state , Citizenship Amendment Act , House of Commons
× RELATED ரூ.1000 கோடி டெண்டர் தராததால் ஜெகன்மோகனை...