×

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கின்போது உச்சரிக்கப்படும் சமஸ்கிருத மந்திரங்களை தமிழில் மொழிபெயர்க்க கோரி வழக்கு

* பொதுநல மனுக்களை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்ற ஐகோர்ட் பரிந்துரை

சென்னை: தஞ்சை பெரிய கோயில் குட முழுக்கு விழாவில் உச்சரிக்கும் சமஸ்கிருத மந்திரங்களை தமிழில் மொழிபெயர்த்து தெரிவிக்க கோரிய வழக்கை பொதுநல வழக்குகளை விசாரிக்கும் 2 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்யுமாறு பரிந்துரை செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூரை சேர்ந்த மணிகானந்தா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா நாளை (இன்று) நடைபெற உள்ளது. இந்த  விழாவிற்கான பூஜைகள் ஜனவரி 27ம் தேதி முதல் நடந்து வருகின்றன.  குடமுழுக்கு நிகழ்ச்சியின்போது உச்சரிக்கும் சமஸ்கிருத மந்திரங்களை தமிழில் உச்சரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர்  வலியுறுத்தினர்.

மந்திரங்களை தமிழில் சொல்லும்போதுதான் அதன் அர்த்தங்களை பக்தர்கள் அறிந்து கொள்ள முடியும் என்பதால், குடமுழுக்கு விழாவில் உச்சரிக்கும் மந்திரங்களை தமிழில் மொழி பெயர்த்து தெரிவிக்கும்படி  அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது என்றார். அப்போது, அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் கார்த்திகேயன், குடமுழுக்கு விழாவின் போது தமிழுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.

இதையடுத்து, நீதிபதி, சமஸ்கிருத மந்திரங்களின் தமிழ்மொழி பெயர்ப்பு  உள்ளதா  எனவும்,  எந்த அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது  எனவும் மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார். மேலும், மனுதாரர் இந்துகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறியதால், இந்த வழக்கை பொதுநல வழக்குகளை விசாரிக்கும் அமர்வில்  பட்டியலிட  தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறேன் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : junction ,Tanjay ,shrine , Case for translating Sanskrit mantras, Tamil ,shrine
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...