×

மம்தா - ராஜ்பவன் இடையே சமரசம்: கவர்னருக்கு ஹெலிகாப்டர் வழங்கியது மே. வங்க அரசு

கொல்கத்தா  மேற்கு வங்க மாநில அரசுக்கும், கவர்னர் ஜக்தீப் தன்காருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து அவரது பயணத்துக்கு ஹெலிகாப்டர் வழங்க அரசு முன்வந்துள்ளது.  மேற்கு வங்கத்தில் ஆளுநர் ஜக்தீப் தன்காருக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே தொடர்ந்து பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நிலவி வந்தது. அரசுக்கு எதிராக கவர்னரும் அவ்வப்போது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தார். இதற்கு மம்தா பானர்ஜி தகுந்த பதிலடி கொடுத்து வந்தார். இதன் காரணமாக கடந்த ஆண்டு கவர்னர் பங்கேற்கும் வெளிமாவட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு கூட அரசு ஹெலிகாப்டர் வழங்க மறுத்து வந்தது. இதன் காரணமாக அவர் தரைவழி பயணத்தையே மேற்கொண்டார்.  இந்நிலையில், கவர்னருக்கும் மாநில அரசுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக நாளை சாந்தி நிகேதனில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கவர்னருக்கு ஹெலிகாப்டர் வழங்க மாநில அரசு முன்வந்துள்ளது.

இது தொடர்பாக ராஜ்பவன் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘சாந்தி நிகேதனில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு செல்வதற்காக அரசிடம் ஹெலிகாப்டர் கேட்டிருந்தோம். இதற்கு முந்தைய தருணங்களில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது ஹெலிகாப்டர் வழங்க மாநில அரசு சம்மதித்துள்ளது,’ என குறிப்பிடப்பட்டுள்ளது.  நேற்று முன்தினம் நிதியமைச்சர் அமித் மித்ரா மற்றும் சட்டப்பேரவை விவகாரங்கள் துறை அமைச்சர் பர்தா சட்டர்ஜி ஆகியோர் 7ம் தேதி தொடங்கும் மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து கவர்னர் தன்காருடன் ஆலோசனை நடத்தினர்.   


Tags : Bengal ,Government ,governor ,Mamta - Rajbhavan ,Compromise - Rajpawan ,Mamta , Mamta, Rajpawan, Governor, Helicopter, West Bengal Govt
× RELATED கடும் வெப்ப அலை: மேற்கு வங்க பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை