×

இந்தியாவிலிருந்து வெளியேறாவிட்டால் எங்கள் பாணியில் வெளியேற்றுவோம்: வங்கதேசத்தினருக்கு ராஜ் தாக்கரே கட்சி பகிரங்க எச்சரிக்கை

பன்வெல்: ‘‘இந்தியாவில் இருந்து வங்கதேசத்தினர் வெளியேற வேண்டும், இல்லாவிட்டால் எங்கள் பாணியில் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்’’ என்று ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சி பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
மும்பை அருகே ராய்கட் மாவட்டத்தில் உள்ள பன்வெல் பகுதியில் மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சியினர் பிரமாண்டமான பேனர் வைத்துள்ளனர். அதில், ராஜ் தாக்கரே மற்றும் அவரது மகன் அமித் தாக்கரே ஆகியோரது படங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த பேனரில், ‘‘இந்தியாவில் வசிக்கும் வங்கதேசத்தினர் உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சி தனது பாணியில் அவர்களை நாட்டில் இருந்து வெளியேற்றும்’’ என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

கடந்த 23ம் தேதியன்று பால் தாக்கரே பிறந்தநாளை முன்னிட்டு நடந்த மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சி கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே, குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்தார். இதற்கு ஆதரவாகவும் இந்தியாவில் ஊடுருவியிருக்கும் வங்கதேசத்தினர் மற்றும் பாகிஸ்தானியர்களை நாட்டில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தியும் பிப்ரவரி 9ம் தேதியன்று மும்பையில் பிரமாண்டமான பேரணி நடைபெறும் என்று அந்த கூட்டத்தில் ராஜ் தாக்கரே அறிவித்திருந்தார். ‘‘குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதம் நடத்தப்படலாம். ஆனால், சட்டவிரோதமாக நம் நாட்டில் ஊடுருவியவர்களுக்கு நாம் ஏன் அடைக்கலம் கொடுக்க வேண்டும்? இந்தியர்கள் அனைவரும் எனது சகோதர சகோதரிகள்தான். ஆனால், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவியவர்களை நான் ஏன் எனது சகோதர சகோதரிகளாக பாவிக்க வேண்டும்? இந்தியர்கள் அல்லாதவர்கள் இந்தியாவில் வசிக்க உரிமையில்லை. இந்தியா ஒன்றும் யாரும் வந்து தங்கிக்கொள்ள தர்ம சத்திரம் அல்ல’’ என்று ராஜ் தாக்கரே கூறியிருந்தார்.

இந்த நிலையில், அவரது கட்சி சார்பில் வங்கதேசத்தினருக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்து பன்வெலில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சியை தொடங்கிய போது காவி, நீலம் மற்றும் பச்சை ஆகிய மூன்று வண்ணங்களை கொண்ட  கட்சிக்கொடியை ராஜ் தாக்கரே அறிமுகப்படுத்தினார். அதாவது, இந்து, தலித் மற்றும் முஸ்லிம் மக்களை மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா அரவணைத்து செல்லும் என்பதை உணர்த்தும் வகையில் அந்த கொடியை ராஜ் தாக்கரே வடிவமைத்திருந்தார். ஆனால், கடந்த ஜனவரி 23ம் தேதி நடந்த கூட்டத்தில் முழுவதும் காவி நிறத்தை கொண்ட தனது கட்சியின் புதிய கொடியை ராஜ் தாக்கரே அறிமுகம் செய்தார். அந்த காவிக் கொடியில் சத்ரபதி சிவாஜி மகாராஜா காலத்தில் பயன்படுத்தப்பட்ட ராஜமுத்திரையும் இடம்பெற்றுள்ளது.


Tags : Bangladeshis ,Raj Thackeray , India, Bangladeshis, Raj Thackeray
× RELATED பா.ஜ.க. திட்டத்தால் மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நெருக்கடி..!!