×

நித்யானந்தாவுக்கு 3 கோடி நஷ்டஈடு வழங்கும் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுக்கு தடை: பெங்களூரு கோர்ட் அதிரடி

பெங்களூரு: மானநஷ்ட வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை  நடைமுறைப்படுத்த பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட் தடை விதித்துள்ளது. நித்யானந்தா  தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது ஆதரவாளராக இருந்த ஆர்த்தி ராவ்  புகார் தெரிவித்தார். இதையடுத்து   நித்யானந்தாவின் புகழுக்கு களங்கம் விளைவித்ததாக குற்றம் சாட்டி அவர் மீது  அமெரிக்காவில் உள்ள கொலம்பஸ் மாவட்ட நீதிமன்றத்தில் ₹3 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிடக் கோரி  நித்யானந்தா ஆசிரமத்தின் சார்பில்  வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கில் ஆர்த்தி ராவுக்கு சம்மன் வழங்காததால்  பல மாதங்கள் நடந்த வழக்கு விசாரணைக்கு பிறகு நித்யானந்தாவுக்கு ஆதரவாக  தீர்ப்பு வழங்கப்பட்டது. கொலம்பஸ் கோர்ட்டில் கிடைத்த தீர்ப்பை இந்தியாவில்  அமல்படுத்தக் கோரி நித்யானந்தா ஆசிரமம் சார்பில் பெங்களூரு  மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 2017ல் வழக்கு தொடரப்பட்டது.

இந்த  வழக்கிலும் ஆர்த்தி ராவுக்கு சம்மன் கிடைக்காததால் நித்யானந்தாவுக்கு  ஆதரவாக தீர்ப்பு கிடைத்தது. இந்த தீர்ப்பில் கொலம்பஸ் நீதிமன்றம் வழங்கிய  தீர்ப்பின்படி நித்யானந்தாவுக்கு மேற்கண்ட தொகையை ஆர்த்தி ராவ்  வழங்க  வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.  இந்த தீர்ப்புக்கு பிறகு  2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நித்யானந்தாவின் கொலம்பஸ் ஆசிரமம்  சார்பில் மீண்டும் பெங்களூரு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்யப்பட்டது. இந்த மனுவில் கொலம்பஸ் மற்றும் பெங்களூரு நீதிமன்றம்  வழங்கிய தீர்ப்பின்படி நித்யானந்தாவுக்கு ஆர்த்தி ராவ் வழங்க வேண்டிய  மானநஷ்ட  தொகையான ₹3 கோடியை அவருடைய  சொத்துக்களை முடக்கி பெற்றுத்தர  கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கின் சம்மன் ஆர்த்தி  ராவுக்கு கிடைத்ததை தொடர்ந்து உடனடியாக பதில் மனு தாக்கல் செய்து தனக்கு  மேற்கண்ட எந்த வழக்கிலும் சம்மன் கிடைக்கவில்லை. மேலும், மேற்கண்ட அனைத்து  தீர்ப்புக்கும் தடை கோரப்பட்டது. ஆர்த்தி ராவின் மனுவை ஏற்றுக் கொண்ட  நீதிமன்றம் அனைத்து தீர்ப்புகளுக்கும் தடை வழங்கி உத்தரவு  பிறப்பித்துள்ளது.



Tags : US ,Nithyananda ,court action ,Bengaluru , Nithyananda, Compensation, US Court, Bengaluru Court
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...