×

முதல் ஒருநாள் போட்டி இந்தியா - நியூசிலாந்து இன்று மோதல்: ஹாமில்டனில் காலை 7.30க்கு தொடக்கம்

ஹாமில்டன்: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹாமில்டன், செடான் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 7.30க்கு தொடங்குகிறது. நியூசிலாந்துடன் நடந்த டி20 தொடரில் 5-0 என்ற கணக்கில் முழுமையாக வென்று ஒயிட் வாஷ் சாதனை படைத்த இந்திய அணி, அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகிறது. முதல் போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது. காயம் காரணமாக விலகியுள்ள ரோகித் ஷர்மாவுக்கு பதிலாக மயாங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். இளம் வீரர் பிரித்வி ஷா ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிறார். அறிமுக வீரர்கள் அகர்வால், பிரித்வி இணைந்து இன்னிங்சை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக கவாஸ்கர் - சுதிர் நாயக் (1974, இங்கிலாந்துக்கு எதிராக), பார்த்தசாரதி ஷர்மா - திலீப் வெங்சர்க்கார் (1976, நியூசி.க்கு எதிராக) மற்றும் 2016ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கே.எல்.ராகுல், கருண் நாயர் இணைந்து அறிமுக  வீரர்களாக இன்னிங்சை தொடங்கியுள்ளனர்.  விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் 5வது வீரராகக் களமிறங்க உள்ளார்.

இந்திய அணியில் முன்னணி வீரர்கள் ரோகித், தவான், புவனேஷ்வர், ஹர்திக், தீபக் சாஹர் ஆகியோர் காயம் காரணமாக இடம் பெறாதது போல, நியூசிலாந்து அணியிலும் கேப்டன் கேன் வில்லியம்சன், டிரென்ட் போல்ட், பெர்குசன், மேட் ஹென்றி இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவை கொடுத்துள்ளது. முதல் 2 ஒருநாள் போட்டியில் வில்லியம்சனுக்கு பதிலாக டாம் லாதம் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுமே ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்குத் தயாராவதில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்த ஒருநாள் தொடர் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தத் தவறியுள்ளது. எனினும், இளம் வீரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி திறமையை நிரூபிக்க காத்திருப்பதால் ஆட்டம் மிகவும் சுவாரசியமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால், கே.எல்.ராகுல், மணிஷ் பாண்டே, ரிஷப் பன்ட், ஷ்ரேயாஸ் அய்யர், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யஜ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பூம்ரா, ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி. நியூசிலாந்து: டாம் லாதம் (கேப்டன்), மார்டின் கப்தில், ராஸ் டெய்லர், கோலின் டி கிராண்ட்ஹோம், ஜிம்மி நீஷம், ஸ்காட் குகலெஜின், டாம் பிளண்டெல், ஹென்றி நிகோல்ஸ், மிட்செல் சான்ட்னர், ஹமிஷ் பென்னட், ஈஷ் சோதி, டிம் சவுத்தீ, கைல் ஜேமிசன், மார்க் சாப்மேன்.

நேருக்கு நேர்...
* இந்தியா - நியூசிலாந்து அணிகளிடையே இதுவரை 107 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. இவற்றில் இந்தியா 55 போட்டியிலும், நியூசிலாந்து 46 போட்டியிலும் வென்றுள்ளன. ஒரு போட்டி சரிசமனில் முடிந்துள்ளது (டை). 5 போட்டிகளில் முடிவு இல்லை.
* இந்திய மண்ணில் நடந்த 35 போட்டிகளில் இந்தியா 26 வெற்றியும், நியூசிலாந்து 8 வெற்றியும் பெற்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டது.
* நியூசிலாந்தில் நடந்த 39 போட்டிகளில் நியூசிலாந்து 22-14 என முன்னிலை வகிக்கிறது. ஒரு போட்டி சரிசமனில் முடிந்த நிலையில், 2 போட்டி ரத்தாகி உள்ளது.
* பொதுவான மைதானங்களில் நடந்த 33 போட்டியில் நியூசிலாந்து 16-15 என முன்னிலை வகிக்கிறது. 2 போட்டியில் முடிவு இல்லை.Tags : match ,ODI ,India ,ODI match ,New Zealand First ,New Zealand , First ODI, India, New Zealand
× RELATED ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி