×

நியூசிலாந்துடன் டெஸ்ட் தொடர் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்தார் பிரித்வி

புதுடெல்லி: நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ள இந்திய அணியில் தொடக்க வீரர் பிரித்வி ஷா மீண்டும் இடம் பிடித்துள்ளார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் நடந்த டி20 தொடரை 5-0 என கைப்பற்றி சாதனை படைத்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. அதன் பிறகு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் பிப். 21ம் தேதியும், 2வது டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச்சில் பிப். 29ம் தேதியும் தொடங்குகின்றன. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விராத் கோஹ்லி தலைமையிலான அணியில் மொத்தம் 16 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால் 8 மாத தடைவிதிக்கப்பட்ட அதிரடி தொடக்க வீரர் பிரித்வி ஷா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா முழு உடல்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் வாய்ப்பு கிடைக்கலாம். ஷுப்மான் கில், நவ்தீப் சைனிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. டி20 தொடரில் அபாரமாக செயல்பட்ட விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் டெஸ்ட் தொடருக்கு சேர்க்கப்படவில்லை. ரிஷப் பன்ட், விருத்திமான் சாஹா என 2 விக்கெட் கீப்பர்கள் இடம் பெற்றுள்ளனர். வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பூம்ராவும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். அனுபவ ஸ்பின்னர்கள் அஷ்வின், ஜடேஜா உள்ளதால், குல்தீப் யாதவ் நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), மயாங்க் அகர்வால், பிரித்வி ஷா, ஷுப்மான் கில், செதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரகானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பூம்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, நவ்தீப் சைனி, இஷாந்த் ஷர்மா (உடல்தகுதி நிரூபிக்க வேண்டியது அவசியம்).

Tags : Prithvi ,New Zealand ,Test ,Test team , New Zealand, Test series, Indian team
× RELATED நியூசிலாந்தில் இருந்து வந்து வாக்களித்த மருத்துவர்